×

தேதி குறிப்பிடாமல் பேரவை ஒத்திவைப்பு: 23 நாட்களுக்கு பதில் 12 நாளில் முடிந்தது

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் நேற்று ஒரே நாளில் 27 துறை மானிய கோரிக்கை மீது விவாதம் நடந்து முடிந்ததையடுத்து, பேரவை கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இதன்மூலம் 23 நாட்கள் நடைபெறுவதாக இருந்த சட்டப்பேரவை கூட்டம், 12 நாளிலேயே முடிந்துள்ளது. தமிழக சட்டப்பேரவை கூட்டம் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடத்தப்பட்டு, நிதி ஒதுக்குவதற்காக கடந்த 9ம் தேதி கூடியது.  23 நாட்கள் பேரவை கூட்டம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவும் ஆபத்து ஏற்பட்டதால், சட்டப்பேரவை கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என்று திமுக, காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. மேலும்  நேற்று முன்தினம் (23ம் தேதி) முதல் சட்டப்பேரவை கூட்டத்தை எதிர்கட்சிகள் புறக்கணித்தன. பின்னர் நேற்று முன்தினம் சபாநாயகர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வு கூட்டம் நடத்தி 24ம் தேதியுடன் (நேற்று) பேரவை கூட்டத்தை முடித்து வைப்பதாக அறிவிக்கப்பட்டது.

அதன்படி, நேற்று ஒரே நாளில் 27 துறை மீதான மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்றது. இதில் காவல்துறை, தீயணைப்பு துறை, வீட்டு வசதி துறை, பொதுத்துறை மானிய கோரிக்கை மீது முதல்வர் எடப்பாடி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பேசினர். மற்ற அமைச்சர்களின் துறைகள் மீது விவாதம், அறிவிப்புகளை அவையில் படித்ததாக கருதி, அதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு நேற்று ஒரே நாளில் 27 துறை மானிய கோரிக்கைகளுக்கு நிதிக்கான ஒப்புதலும் அளிக்கப்பட்டது. இறுதியாக சபாநாயகர் தனபால் பிற்பகல் 2.57 மணிக்கு பேசி முடித்ததும், தமிழக சட்டப்பேரவை கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதன்மூலம் 23 நாட்கள் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட சட்டப்பேரவை கூட்டம் 12 நாட்கள் மட்டுமே நடந்து முடிந்தது குறிப்பிடத்தக்கது. அதிமுக அரசின் இறுதி மானியக்கோரிக்கை இது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Adjournment Debate ,specifying,date, 23 days
× RELATED தேர்தல் நிதியை சுருட்டியதாக உள்கட்சி...