×

144 தடை உத்தரவு எதிரொலி டாஸ்மாக் கடைகளில் அலைமோதிய குடிமகன்கள்: பெட்டிபெட்டியாக வாங்கி சென்றனர்

சென்னை: தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு நேற்று மாலை முதல் அமல்படுத்தப்பட்ட நிலையில் டாஸ்மாக் கடைகளில் மதுவகைகளை குடிமகன்கள் நீண்ட நேரம் காத்திருந்து பெட்டி பெட்டியாக வாங்கிச்சென்றனர். கொரோனா பரவுவதை தடுக்க தமிழகத்தில் நேற்று மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து 6 மணிக்கு டாஸ்மாக் மூடப்படும். இதன் பிறகு மது வாங்க முடியாது என்ற நினைத்த குடிமகன்கள் டாஸ்மாக் நோக்கி நேற்று மதியம் 12 மணி முதலே படையெடுக்க துவங்கினர். இதனால் டாஸ்மாக்கில் குடிமகன்கள் கூட்டம் அலைமோதியது. அரசின் எந்த ஒரு உத்தரவையும் பின்பற்றாமல் கூட்டம், கூட்டமாக முண்டியடித்துக்கொண்டு மதுவகைகளை வாங்கினர்.

மேலும் சிலர் ஏப்ரல் 1 ம் தேதி வரையில் 144 தடை உத்தரவு அமலில் இருப்பதால் முன்கூட்டியே பெட்டி, பெட்டியாக மதுவகைகளை நீண்ட வரிசையில் நின்று வாங்கினர். பல இடங்களில் மதுவகைகளை வாங்குவதற்கு தள்ளு, முள்ளு ஏற்பட்டது. தற்போது, கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் குடிமகன்கள் கூட்டம் கூட்டமாக நின்று மதுவாகியது அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் இருந்தது. கடந்த 22ம் தேதி சுயஊரடங்கு கடைபிடிக்கப்பட்ட போது அதற்கு முந்தைய நாளான 21ம் தேதி ரூ.220 கோடிக்கு மதுவிற்பனை நடைபெற்றது. தற்போது 8 நாட்கள் தொடர்ந்து 144 தடை உத்தரவு அமலில் இருப்பதால் கடந்த 2 நாளில் ரூ.350 கோடிக்கு மேல் மதுவிற்பனை நடைபெற்றிருக்கும் என டாஸ்மாக் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. 


Tags : 144 Prohibition,Echoes , Task Shop
× RELATED ஊழியர்களை வஞ்சிக்கும் ரயில்வே துறை...