×

கொரோனா பீதியால் கேரள வனப்பகுதி வழியாக தமிழகம் வந்த தாய், மகள், பேத்தி காட்டுத்தீயில் சிக்கி கருகிப் பலி

* மேலும் 6 பேர் பரிதவிப்பு
* போடி அருகே பரபரப்பு

போடி: கேரளாவிலிருந்து வனப்பகுதி வழியாக, போடி அருகே உள்ள ராசிங்காபுரம் பகுதிக்கு வந்த தாய், மகள், பேத்தி ஆகிய மூவரும் காட்டுத் தீயில் சிக்கி பரிதாபமாக இறந்தனர். அவர்களுடன் வந்த 6 பேரை மீட்கும் பணியில் வனத்துறை மற்றும் போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தேனி மாவட்டம், போடி அருகே உள்ள ராசிங்காபுரத்தை சேர்ந்த பலர் கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் பூப்பாறை அருகே பேத்தொட்டி என்னும் இடத்தில் தங்கி ஏலத்தோட்டத்தில் வேலை செய்து வந்தனர். கேரளாவில் கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு, வாகனப் போக்குவரத்து கடந்த 2 நாட்களாக நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தை சேர்ந்த ஏலத்தோட்ட தொழிலாளர்கள் வேலை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பேத்தொட்டியில் வேலை செய்து வந்த விஜயமணி, இவரது மகள் ஜெய(22), பேத்தி கீர்த்திகா(2) உள்ளிட்ட 9 பேர் நேற்று அங்கிருந்து ராசிங்காபுரம் திரும்ப முடிவு செய்தனர். வாகனப் போக்குவரத்து இல்லாததால் நண்டாறு, உச்சலூத்து மற்றும் தேவன்குடிசு மலைப்பாதை வழியாக ராசிங்காபுரத்திற்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது கன்னிமார் ஊற்று என்ற பகுதியில் புற்கள் காய்ந்து இருந்ததால் காட்டுத்தீ பரவியுள்ளது. இதில் சிக்கிய விஜயமணி, ஜெய, அவரது 2 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தனர். காட்டுத்தீயில் சிக்கிய மற்ற 6 தொழிலாளர்கள் செல்போன் மூலம் இதுகுறித்து ஊருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போடி வனத்துறையினர், தீயணைப்புத்துறையினர், போடி புறநகர் போலீசார் மலையடிவாரத்துக்கு சென்று, இறந்தவர்களையும், தீயில் சிக்கிய 6 பேரையும் மீட்க வனப்பகுதிக்குள் சென்றனர். இருட்டத் தொடங்கியதால் அவர்களைக் கண்டறிவதில் சிரமம் ஏற்பட்டது.

இதுகுறித்து வனத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘தீ மற்றும் புகையால் 3 பேரும் இறந்துள்ளனர். 4 பேர் பாதுகாப்பான பகுதியில் உள்ளனர். 2 பேர் வனப்பகுதியில் தவறிச் சென்றுள்ளனர். மீட்பு பணி முடிந்த பிறகுதான் முழுவிபரம் தெரிய வரும்’’ என்றனர்.

Tags : Kerala Mother ,granddaughter ,Kerala , Corona, forests of Kerala, Tamil Nadu, mother, daughter, granddaughter, kills karukip
× RELATED சென்னை விருகம்பாக்கத்தில் கொரோனாவால்...