×

புழல் சிறையில் இருந்து 4 பெண்கள் உள்பட 142 கைதிகள் ஜாமீனில் விடுவிப்பு: கொரோனா வைரஸ் எதிரொலி

சென்னை: கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியாக, புழல் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள 4 பெண்கள் உள்பட 142 பேர், ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். புழல் மத்திய சிறைச்சாலையில் உள்ள மகளிர் சிறையில் 150க்கு மேற்பட்ட பெண்களும், தண்டனை சிறையில் 700க்கு மேற்பட்டோரும், விசாரணை சிறையில் 1900க்கு மேற்பட்டோரும் கைதிகளாக அடைக்கப்பட்டுள்ளனர். தற்போது, கொரோனா வைரஸ் தாக்குதல், உலகம் முழுவதும் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. நமது நாட்டில் இதனை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள், பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இதையொட்டி, நேற்று மாலை முதல் வரும் 31ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், தமிழகம் முழுவதும் உள்ள சிறைச்சாலைகளில், கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க, கைதிகளை பார்க்க வரும் உறவினர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. அதே நேரத்தில், சிறையில் உள்ள கைதிகளின் அதிக எண்ணிக்கையை குறைக்கவும் அரசு முடிவு செய்தது.

இதைதொடர்ந்து சிறைகளில், சிறிய வழக்குகளில் சிக்கி தண்டனை அனுபவிப்பவர்களை, நீதிமன்றங்கள் மூலம், நிபந்தனை ஜாமீனில் விடுவிக்க அரசு, உத்தரவிட்டது. அதன்பேரில் ஆலந்தூர், திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய நீதிமன்றங்களில் சிறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் உள்ள 4 பெண்கள் மற்றும்  138 ஆண் கைதிகள் நேற்று விடுவிக்கப்பட்டனர். அவர்கள், வரும் ஏப்ரல் 14ம் தேதி வரை தங்களது வீடுகளில் இருக்க வேண்டும். பின்னர் 15,16,19 ஆகிய தேதிகளில், அந்தந்த நீதிமன்றங்களில், ஆஜராக வேண்டும் என நிபந்தனையுடன் அனுப்பி வைக்கப்பட்டனர். வேலூர் மத்திய சிறையில் இருந்து 133 விசாரணை கைதிகள் நேற்று ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். கோவை மத்திய சிறையில் இருந்து 153 விசாரணை கைதிகள் பரோலில் விடுவிக்கப்பட்டனர்.
டெல்டா மாவட்ட சிறைகளில் இருந்து 157 கைதிகள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

Tags : prisoners ,women ,Corona , Pussy prison, 4 women, 142 prisoners, bail, corona virus
× RELATED 8 கைதிகள் தபால் வாக்கு செலுத்தினர் வேலூர் மத்திய சிறையில்