×

அத்தியாவசிய பொருட்களை மக்களுக்கு வழங்க பொருட்களை விரைவாக ஏற்றி, இறக்க வேண்டும்: ரயில்வே வேண்டுகோள்

புதுடெல்லி: கொரோனா பீதி காரணமாக நாடு முழுவதும் தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், ரயில் போக்குவரத்து உள்பட அனைத்துப் போக்குவரத்தும் வரும் 31ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டு உள்ளன.  இந்நிலையில், உணவு தானியங்கள், உப்பு, சமையல் எண்ணெய், சர்க்கரை, பால், பழவகைகள்,  காய்கறிகள், வெங்காயம், நிலக்கரி, பெட்ரோலிய உற்பத்தி பொருட்கள் ஆகியவை 474  பெட்டிகளில் நேற்று முன்தினம் கொண்டு செல்லப்பட்டன. இரும்பு தாது, ஸ்டீல்,  சிமென்ட், உரம், பெரிய ரக கன்டெய்னர் உள்ளிட்டவை 891 பெட்டிகளில் நேற்று   எடுத்து செல்லப்பட்டன.  அத்தியாவசியப் பொருட்களை கொண்டு செல்லும் சேவையில் ரயில்வேயின் லைன்மேன், தண்டவாள பராமரிப்பு, பாதுகாப்பு பிரிவு ஊழியர்கள் ஈடுபட்டு உள்ளனர். ரயில்வே மருத்துவமனையில் மருத்துவப் பிரிவினர் 24 மணி நேரமும் பணியாற்றி வருகின்றனர்.

இது போன்ற அசாதாரண சூழலில், ரயில்வே பணியில் உள்ள இடர்களை புரிந்து கொண்டு, மக்களுக்கு தடையற்ற சேவையை வழங்க  அத்தியாவசியப் பொருட்கள் உற்பத்தியாளர்கள் தங்கள் சரக்குகளை விரைந்து ஏற்றவும், இறக்கவும் ரயில்வே கேட்டுக் கொண்டுள்ளது.

ரயில் பெட்டி தொழிற்சாலைகளில் மருத்துவமனை கட்டில்கள் தயாரிப்பு
சித்தரஞ்சன் லோகோ ஒர்க்ஸ், சென்னை ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலை, காபூர்தலா ரயில் பெட்டி தொழிற்சாலை, வாரணாசி டீசல் லோகோ ஒர்க்ஸ், எலகங்கா ரயில் சக்கரத் தொழிற்சாலை உள்ளிட்ட பிரிவுகளின் பொது மேலாளருக்கு ரயில்வே வாரியம் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதில், மருத்துவமனைகளுக்கு அத்தியாவசியத் தேவையான கட்டில்கள், மருந்து கொண்டு செல்லும் டிராலிகள், தனிமைப்படுத்துதலுக்கு பயன்படுத்தும் ஸ்டீல் மறைப்புகள், குளுகோஸ் ஏற்ற பயன்படுத்தும் இரும்பு ஸ்டாண்டுகள் ஆகியவற்றை தயாரிப்பதற்கான சாத்தியக்கூறு குறித்து கேட்டுள்ளது.


Tags : Essential Goods, Railways, Corona
× RELATED இந்திய கடற்படையின் புதிய தளபதியாக...