×

பக்தர்கள் வருகை இல்லாததால் மலைப்பாதையில் உலா வரும் வனவிலங்குகள்

திருமலை: திருப்பதிக்கு பக்தர்கள் வருகை இல்லாததால் மலைப்பாதையில் அதிகளவில் வனவிலங்குகள் உலா வருகின்றன. உலகை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் ஊடுருவி விட்டதால் மக்கள் அதிகம் புழங்கும் பகுதிகள் தடை செய்யப்பட்டுள்ளது. இதேபோல் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பல்வேறு நாடுகள் மற்றும் மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் வந்து செல்வதால் அங்கும் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் திருமலையில் பணியாளர்கள் மற்றும் பாலாஜி நகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மட்டுமே அடையாள அட்டை காண்பித்த பின்னர் நடமாடுகின்றனர். அதுவும் அத்தியாவசிய தேவைகள் இருந்தால் மட்டுமே பாலாஜி நகர் பகுதி மக்கள் வெளியே வரவேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனால் அவர்களும் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர்.

தேவஸ்தான பணியாளர்கள் மட்டும் திருப்பதியில் இருந்து திருமலைக்கு குறைந்த எண்ணிக்கையில் பஸ்களில் அனுமதிக்கப்படுகின்றனர். இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் திருமலை மலைப்பாதை தற்போது வாகனங்கள் மற்றும் பக்தர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. திருமலையில் சிறுத்தை, கரடி, ஓநாய், யானை, மான், நரி, முள்ளம்பன்றி மற்றும் பாம்பு இனங்கள் உள்ளன. மலைப்பாதையில் பக்தர்கள், வாகனங்கள் என எந்த நடமாட்டமுமின்றி தற்போது வெறிச்சோடி காணப்படுவதால் வனவிலங்குகள் வெளியே வரத் தொடங்கியுள்ளன.  குறிப்பாக திருமலையில் உள்ள நாராயணகிரி பக்தர்கள் ஓய்வறைப்பகுதியில் நேற்று முன்தினம் கரடி ஒன்று நீண்ட நேரம் நடமாடியுள்ளது.

இதேபோல் கோகர்ப்பம் அணைப்பகுதி அருகே சிறுத்தைகள் நடமாடியுள்ளது. அலிபிரி 2 மற்றும் 3வது வளைவுப்பகுதிகளிலும் சிறுத்தை, கரடி, பாம்புகள் நடமாட தொடங்கியுள்ளன. அடர்ந்த வனப்பகுதியில் இருந்த அரியவகை மான்களும், இதர உயிரினங்களும் மலைப்பாதைக்கு வந்து செல்கின்றன. அவை மலைப்பாதையில் உள்ள தடுப்புச்சுவர்கள் மீது அமர்ந்தும், சாலைகளை கடந்தும் வருகின்றன. வழக்கமாக திருமலையிலோ அல்லது மலைப்பாதையிலோ வனவிலங்குகள் நடமாடினால் எந்த நேரமாக இருந்தாலும் உடனடியாக வன ஊழியர்கள் விரைந்து வந்து அவற்றை விரட்டுவது வழக்கம். ஆனால் பக்தர்களுக்கு தற்போது அனுமதியில்லை என்பதால் வனவிலங்குகள் எந்த தொந்தரவும் இன்றி சுற்றித்திரிகின்றன. கொரோனா பாதிப்பு அடங்கி பக்தர்கள் திருமலைக்கு அனுமதிக்கப்படும் வரை அலிபிரி மற்றும் திருமலை முக்கிய பகுதிகளில் நடமாடும் வனவிலங்குகள் விரட்டப்படாது என தெரிகிறது.Tags : Pilgrims, hillbillies, animals
× RELATED ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி...