×

டெல்லியில் தடை உத்தரவை தொடர்ந்து ஷாகீன் பாக்கில் போராட்டம் நடத்தி வந்த சிஏஏ எதிர்ப்பாளர்கள் கட்டாய வெளியேற்றம்: போலீசார் அதிரடி நடவடிக்கை

புதுடெல்லி: கொரோனா வைரஸ் நோய் காரணமாக டெல்லியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால், ஷாகீன் பாக்கில் போராட்டம் நடத்தி வந்தவர்களை போலீசார் நேற்று வலுக்கட்டாயமாக வெளியேற்றினர்.  தேசிய குடியுரிமை திருத்த சட்டத்துக்கு (சிஏஏ) எதிராக டெல்லி ஷாகீன் பாக்கில் கடந்த 3 மாதங்களுக்கு மேலாக தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதை முடிவுக்கு கொண்டு வர பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. இதற்காக போலீசார் மட்டுமின்றி, உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் அமைக்கப்பட்ட மூன்று பேர் அடங்கிய சமரச குழுவும் போராட்டத்தை கைவிட கேட்டுக் கொண்டது.  எனினும், போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து செல்ல மறுத்து விட்டனர். இதனால், கொரோனா பீதிக்கு இடையிலும் கடந்த 90 நாட்களை கடந்து போராட்டம் நடைபெற்று வந்தது.

இந்நிலையில், டெல்லி மட்டுமின்றி நாடு முழுவதும் கொரோனா வைரஸ் நோய் வேகமாக பரவி வருவதால், மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, டெல்லி மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. டெல்லியை பொறுத்தவரை, இந்த நோய்க்கு இதுவரை 30 பேர் வரை பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.  அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக டெல்லியிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  இதன்படி, நகரில் 5 பேருக்கு மேல் பொது இடங்களில் கூட்டமாக கூட கூடாது. போராட்டங்கள், பேரணி, பொதுக் கூட்டங்கள் நடத்தக் கூடாது. இந்த உத்தரவு ஷாகீன் பாக் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் பொருந்தும் என முதல்வர் கெஜ்ரிவாலும் அறிவித்து இருந்தார்.

இதன் தொடர்ச்சியாக, ஷாகீன்பாக் போராட்டக் களத்தில் இருந்த போராட்டக்காரர்கள் அனைவரையும் போலீசார் நேற்று வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். முன்னதாக, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால் அங்கிருந்து வெளியேறுமாறு போராட்டக்காரர்களிடம் போலீசார் கேட்டுக்கொண்டனர். ஆனால், இதற்கு அவர்கள் மறுப்பு தெரிவித்தனர். இதையடுத்து, வலுக்கட்டாயமாக அங்கிருந்த 50 பேரையும் போலீசார் வெளியேற்றினர். இங்கு போராட்டம் நடத்தி வந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்கள். இவர்களில் 6 பெண்கள் உட்பட 9 பேர் வெளியேற மறுத்தனர். அவர்களை   காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டதாக துணை கமிஷனர் ஆர்பி மீனா தெரிவித்தார். இதேபோன்று, மற்றொரு போராட்டக்களமான தெற்கு டெல்லியின் ஹாஸ் ராணி பகுதியில் இருந்தவர்களும் போலீசாரால் வெளியேற்றப்பட்டனர்.

Tags : protesters ,CAA ,Shakeen Bagh ,Delhi ,police action , Delhi, Corona virus, 144 ban order
× RELATED சிஏஏ அமல்படுத்தியதை கண்டித்து திருவாரூரில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்..!!