×

கொரோனா நிவாரணத்துக்கு 3,280 கோடி நிதி ஒதுக்கீடு: ரேஷன் கார்டுக்கு தலா 1000: ஏப்ரல் மாத பொருட்கள் இலவசம் : நடைபாதை வியாபாரிகளுக்கு 2000 : தமிழக அரசு அறிவிப்பு

சென்னை. கொரோனா நிவாரணத்துக்காக 3,280 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அனைத்து குடும்ப அரிசி அட்டைதாரர்களுக்கும் 1000 வழங்கப்படும். மேலும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஏப்ரல் மாதத்திற்கான அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், சர்க்கரை விலையின்றி வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு: கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுக்க அதிமுக அரசு, தொடர்ந்து தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது. 23ம் தேதி தனிமைப்படுத்துதல் என்ற முறையை தீவிரப்படுத்த நான் பல்வேறு அறிவிப்புகளை இந்த அவையில் வெளியிட்டேன். அந்த உத்தரவுகளை நடைமுறைப்படுத்த குற்றவியல் விசாரணை நடைமுறைச் சட்டம் பிரிவு 144ன் கீழ், சென்னையில் காவல் ஆணையரும், பிற மாவட்டங்களில் கலெக்டர்களும் உரிய உத்தரவுகளை பிறப்பிக்க உள்ளனர்.

 இவ்வாணைகள் அனைத்தும்  இன்று(நேற்று) மாலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது.  இதனால், தினக் கூலிகள், விவசாயக் கூலிகள், ஆட்டோ ஓட்டுநர்கள், டாக்ஸி ஓட்டுநர்கள், கட்டுமான மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள், நடைபாதை வியாபாரிகள், முதியோர் உள்ளிட்ட பொதுமக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஏழை, எளிய மக்களின் சிரமங்களை உணர்ந்து, அவர்களுக்கு தகுந்த நிவாரணம் வழங்க அதிமுக அரசு முடிவு செய்து, ₹3,280 கோடி மதிப்பிலான சிறப்பு நிவாரண உதவிகள் வழங்கப்படும்.

* அனைத்து குடும்ப அரிசி அட்டைதாரர்களுக்கும் 1,000 நிவாரணமாக வழங்கப்படும். அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் அவர்களுக்கு உரித்தான ஏப்ரல் மாதத்திற்கான அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் மற்றும் சர்க்கரை விலையின்றி வழங்கப்படும். பொது விநியோகக் கடைகளில் கூட்டத்தை தவிர்க்க இந்நிவாரணம், டோக்கன் முறையில், ஒதுக்கப்பட்ட நாளிலும், நேரத்திலும் விநியோகிக்கப்படும். இந்த 1,000 நிவாரணம் மற்றும் விலையில்லாப் பொருட்களை பெற விருப்பம் இல்லாதவர்கள், இதற்கான வலைதளத்தில் மின்னணு முறையில் அல்லது செயலியில் பதிவு செய்து கொள்ளலாம்.
* குடும்ப அட்டைதாரர்கள் மார்ச் மாதத்திற்கான ரேஷன் பொருட்களை வாங்க தவறியிருப்பின், ஏப்ரல் மாதத்திற்கான பொருட்களுடன் சேர்த்து வாங்கிக் கொள்ளலாம்.
* கட்டிடத் தொழிலாளர்கள் மற்றும் ஓட்டுநர் நல வாரியத்தில் உள்ள ஆட்டோ தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு சிறப்பு தொகுப்பாக தலா 1,000 மற்றும் 15 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு, ஒரு கிலோ சமையல் எண்ணெயும் வழங்கப்படும்.
*  தற்போது தமிழ்நாட்டில் சிக்கித் தவிக்கும் பிற மாநிலங்களைச் சேர்ந்த கட்டுமான மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களை, மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் தொழிலாளர் வாரியங்கள் அடையாளம் கண்டு,
அவர்களின் குடும்பம் ஒன்றுக்கு 15 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு மற்றும் ஒரு கிலோ சமையல் எண்ணெய் இலவசமாக வழங்கப்படும்.
* அம்மா உணவகத்தின் மூலமாக சூடான, சுகாதாரமான உணவு தொடர்ந்து வழங்கப்படும்.
* எந்த வசதியும் இல்லாதோர், ஆதரவற்றோர் போன்றவர்களுக்கு, அவர்கள் இருக்கும் இடத்திலேயே, சூடான, சுகாதாரமான முறையில் உணவு தயாரித்து வழங்கப்படும்.  இதற்கென தேவைக்கு ஏற்ப பொது சமையல் கூடங்கள் அமைக்க, சென்னை மாநகர ஆணையருக்கும், பிற மாவட்ட ஆட்சியர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
* அங்கன்வாடி மையங்களில் உணவருந்தும் முதியோர்களுக்கு தேவையான உணவினை அவர்கள் வசிக்கும் இடங்களில் வழங்குவதற்கு மாவட்ட ஆட்சித்தலைவர்கள் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
* பதிவு செய்யப்பட்ட நடைபாதை வியாபாரிகளுக்கு பொது விநியோகத் திட்டத்தில் வழங்கப்படும் 1,000 உடன் கூடுதலாக 1,000 நிவாரணத் தொகையாக வழங்கப்படும்.
* மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ், இந்த மாதத்தில் பணி புரிந்த தொழிலாளர்களுக்கு, 2 நாட்களுக்கான ஊதியம், சிறப்பு ஊதியமாக கூடுதலாக வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Pavement Dealers ,Government of Tamil Nadu , Corona Relief, Ration Card, Goods Free, Govt
× RELATED மறைந்த முன்னாள் அமைச்சர்...