×

முதல்வர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்: கம்பெனி மேலாளர் கைது

சென்னை: முதல்வர் பழனிசாமி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த தனியார் நிறுவன மேலாளரை போலீசார் கைது செய்தனர். அவர் கடந்தாண்டும் முதல்வர் வீட்டிற்கு மிரட்டல் விடுத்தது விசாரணையில் அம்பலமாகி உள்ளது.சென்னை எழும்பூரில் உள்ள மாநில காவல் கட்டுப்பாட்டு அறைக்கு ேநற்று முன்தினம் மாலை 6.18 மணிக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில், மது போதையில் பேசிய நபர் ஒருவர், ‘தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீட்டில் நான் சக்தி வாய்ந்த வெடிகுண்டு வைத்துள்ளேன். அது சற்று நேரத்தில் வெடித்து சிதறும்,’’ என்று கூறி இணைப்பை துண்டித்துவிட்டார். அதைகேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார் அபிராமபுரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்படி போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் முதல்வர் வீட்டிற்கு வந்து சோதனை நடத்தினர். இந்த சோதனையில் எந்த வெடிகுண்டும் சிக்கவில்லை. அதன் பிறகு தான் இது வெறும் புரளி என தெரியவந்தது.

பின்னர் மிரட்டல் விடுத்த செல்போன் எண்ணை வைத்து சைபர் க்ரைம் போலீசார் உதவியுடன் விசாரணை நடத்தினர். அப்போது மடிப்பாக்கம் ராம் நகர் 9வது குறுக்கு தெருவில் சிக்னல் காட்டியது. இதுகுறித்து மடிப்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி மடிப்பாக்கம் போலீசார் சிக்னல் காட்டிய முகவரிக்கு சென்று விசாரணை நடத்தியபோது, எழும்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை செய்து வரும் சிக்கந்தர் பாஷா (41) என்பவர் தான், குடிபோதையில் முதல்வர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. இவர் கடந்த ஆண்டு ஜனவரி 19ம் தேதி கானாத்தூர் பகுதியில் இருந்து முதல்வர் வீட்டிற்கு  இருந்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததும், அப்போது கானாத்தூர் போலீசார் சிக்கந்தர் பாஷா மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்ததும் விசாரணையில் தெரியவந்தது.அதைதொடர்ந்து மடிப்பாக்கம் போலீசார் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சிக்கந்தர் பாஷாவை அதிரடியாக கைது செய்தனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Tags : Bombing ,CM ,home ,Company manager , CM, Bomb threat, manager arrested
× RELATED பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே...