×

கொரோனா தொடர்பான புகார், விளக்கம் அளிக்க 24 மணி நேர கட்டுப்பாட்டு மையம்: மாநகராட்சி ஏற்பாடு

சென்னை: கொரோனா தொடர்பான புகார் மற்றும் விளக்கம் அளிக்க மாநகராட்சி சார்பில் 24 மணி நேர கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பணியில் மாநகராட்சியுடன் இணைந்து செயல்பட விரும்புவர்கள் தொடர்பு கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. உலகமெங்கும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதுவரை பல்வேறு நாடுகளில் இந்த நோயின் தாக்குதலுக்கு உள்ளாகி சுமார் 14 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளனர். மேலும், 3 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் இந்நோயின் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர். தமிழகத்திலும் இதுவரை 8 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்த நோய் மேலும் பரவாமல் தடுக்க அரசு பல்வேறு முயற்சிகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகிறது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை மத்திய அரசு சுய ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது. இருப்பினும் இந்த நோயின் தாக்கம் குறையவில்லை, தமிழகத்தில் உள்ள சென்னை, காஞ்சிபுரம் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்கள் உட்பட இந்தியா முழுவதும் மொத்தம் 75 மாவட்டங்கள் அரசின் தீவிர கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது. அதன் அடிப்படையில் நேற்று மாலை 6 மணி முதல் வரும் 31ம் தேதி வரை தமிழக அரசு 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. மருந்து, பால், காய்கறி, மளிகைப் பொருட்கள் போன்ற அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்க அரசு அறிவுறுத்தியுள்ளது. ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதால், வெளி மாநில மக்கள் மற்றும் சென்னை முழுவதும் நடைபாதையில் வசித்தவர்களை மாநகராட்சி நிர்வாகம் மீட்டு, அரசு பள்ளி மற்றும் சமுதாய கூடங்களில் தங்க வைத்துள்ளனர். இவ்வாறு தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தவும், பொதுமக்கள் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையிலும் சென்னை மாநகராட்சி சார்பில் ரிப்பன் மாளிகையில் 24 மணி நேரம் இயங்கும் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது.  மாநகர மருத்துவர் அலுவலர் ேஹமலதா தலைமையில் மருத்துவர்கள் குழு பொதுமக்களின் சங்தேகளுக்கு விளக்கம் அளித்து வருகின்றனர். குறிப்பாக எந்த மாதிரியான உணவு உட்கொள்ள வேண்டும், குழந்தைகளை வெளியில் விளையாட விடலாமா, கிருமிநாசினி எவ்வாறு தயாரிக்க வேண்டும், செல்ல பிராணிகள் மூலம் இந்த நோய் பரவுமா உள்ளிட்ட மக்களின் பல்வேறு கேள்விகளுக்கு இந்த மையத்தில் விளக்கம் அளிக்கப்படுகிறது.

பொதுமக்கள் கொரோனா வைரஸ் நோய் தொற்று தொடர்பாக தங்களுக்கு அருகாமையிலுள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், நகர்ப்புற சமுதாய நல மருத்துவமனைகளிலும், மற்றும் 044-2538 4520 என்ற சிறப்பு எண்ணிலும் தொடர்பு கொண்டு சந்தேகங்கள் மற்றும் தகவல்களை தெரிந்துகொள்ளலாம். அதுமட்டுமின்றி, கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளில் இணைந்து செயல்பட விருப்பம் உள்ளவர்கள் இந்த கட்டுப்பாட்டு மையத்தை தொடர்பு கொள்ளலாம். இதன்படி 15 கிலோ அரிசி, 2 கிலோ பருப்பு, 500 மி.லி சமையல் எண்ணெய், சாம்பார், ரசம் பவுடர், பால் பவுடர் ஆகியவற்றை பொதுமக்கள் உள்ளிட்ட யார் வேண்டும் அளிக்கலாம் என்று மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அறிவித்துள்ளார்.

300 பேர் கைகளில் முத்திரை
சென்னை அண்ணாநகர், அமைந்தகரை, அரும்பாக்கம், வில்லிவாக்கம், அயனாவரம், ஷெனாய் நகர், முகப்பேர் ஆகிய பகுதியில், வெளிநாடு சென்று திரும்பியவர்களின் விவரம் குறித்து மாநகராட்சி அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.
அப்போது, 300 பேர், சிங்கப்பூர், துபாய், மலேசியா, லண்டன்  ஆகிய வெளிநாடுகளுக்கு சென்று வந்தது தெரிந்தது. அவர்களின் வீடுகளில் எச்சரிககை நோட்டீஸ் ஒட்டினர். மேலும், சம்பந்தப்பட்ட 300 பேரின் கைகளில்  முத்திரை குத்தினர்.
மேலும் அவர்களுக்கு கொரோனா  விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டுபிரசுரம் விநியோகிக்கப்பட்டது. முத்திரை குத்தியவர்கள் யாரும் வீட்டை விட்டு வெளியில் செல்லக்கூடாது என அதிகாரிகள் எச்சரித்தனர். மேலும் முத்திரை குத்திய அனைவரும் வெளியே செல்லாதபடி தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.


Tags : corporation ,Corona ,conflict , Corona, Control Center, Corporation
× RELATED ஆவடி மாநகராட்சியில் 4 பேர் பலி