×

பூந்தமல்லி கடை வீதியில் சுற்றித்திரிந்த பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 3 பேருக்கு கடும் எச்சரிக்கை: தனிமை வீட்டுக்கு அனுப்பி வைப்பு

பூந்தமல்லி: வீட்டு கண்காணிப்பில் இருந்த 3 பிரான்ஸ் நாட்டினர் பூந்தமல்லி பகுதியில் சுற்றித்திரிந்ததால் அவர்களை பிடித்து அதிகாரிகள் விசாரித்து மீண்டும் தனிமை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக வெளிநாடுகளுக்கு சென்றுவிட்டு வருபவர்களை பூந்தமல்லியில் உள்ள கோரன்டைன் வார்டுக்கு அழைத்து வரப்பட்டு அவர்களுக்கு கொரோனா தொற்று உள்ளதா? என பரிசோதனை செய்யப்பட்டு 24 மணி நேர கண்காணிப்பிற்கு பின் வீட்டிற்கு அனுப்பிவைக்கப்படுகின்றனர். மேலும் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு 14 நாட்கள் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் இந்த கோரன்டைன் வார்டில் சிலர் தொடர்ந்து 14 நாட்கள் கண்காணிப்பில் இருந்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று பூந்தமல்லியில் உள்ள ஒரு கடைக்கு பொருட்கள் வாங்க 3 வெளிநாட்டினர் வந்தனர். இதனைப் பார்த்த பொதுமக்கள் அலறியடித்து கொண்டு பூந்தமல்லி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து பூந்தமல்லி தாசில்தார் காந்திமதி, மற்றும் சுகாதாரத்துறையினர், காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து 3 வெளிநாட்டினரை தனியாக அழைத்துச் சென்றனர்.  விசாரணையில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 3 பேரும் பூந்தமல்லியை அடுத்த கூடப்பாக்கத்தில் உள்ள தனியார் கார் தொழிற்சாலையில் வேலை செய்பவர்கள். கடந்த சில நாட்களாக வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டவர்கள். அவர்களுக்கு உணவு உள்ளிட்ட அடிப்படை வசதியில்லாமல் அவதிப்பட்டனர். இதையடுத்து பொருட்களை வாங்க பூந்தமல்லியில் உள்ள கடைகளுக்கு வந்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் சுகாதாரத்துறையினர் பூந்தமல்லியில் உள்ள கோரன்டைன் சிறப்பு வார்டுக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்தனர்.

அவர்களுக்கு கொரோனா பாதிப்பு எதுவும் இல்லை என்பது தெரியவந்ததும் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு இருக்க வேண்டும். பொது இடங்களில் சுற்றித் திரியக்கூடாது என 3 பேரையும் அதிகாரிகள் எச்சரித்தனர்.  இதற்கிடையே பூந்தமல்லி கோரன்டைன் வார்டில் தற்போது 49 பேர் கண்காணிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. வெளிநாட்டினர் 3 பேர் பூந்தமல்லியில் சுற்றித்திரிந்த சம்பவம் மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : nationals ,French ,Poonthamalli ,shop road ,Poonthalli , Poonamallee Shop Street, France, Corona Virus
× RELATED பிரான்ஸ் நாட்டு தூதர் காஞ்சிபுரம்...