×

கொள்ளையடிக்கும் மருந்துகடைகள்; 5ரூபாய் மாஸ்க் 50 ரூபாய்: கண்டுகொள்ளாத அரசு

சென்னை: அரசு  கண்டுகொள்ளாததால் கொரோனா  தொற்றை தடுக்கும் முகத்திற்கு அணியும் 5  ரூபாய்க்கு விற்ற முகமூடிகள்(மாஸ்க்) இப்போது 50 ரூபாய்க்கு விற்று மருந்து  கடைகள் கொள்ளை அடிக்கின்றன. சீனாவில் கொரோனா வைரஸ் பரவும் செய்தி  தொடங்கியதும், ஊடகங்களில்  முகமூடி(மாஸ்க்) அணிந்திருக்கும் சீனர்களின் படங்கள் வைரலாகின. அவ்வளவுதான் மருந்து கடைகள் ஜனவரி மாதமே முகத்திற்கு அணியும் முகமூடிகளை பதுக்க ஆரம்பித்து விட்டன. உஷாரான மக்களில் சிலர்  முகமூடிகளை வாங்க முயன்ற போது ‘ஸ்டாக்’ இல்லை என்று சொல்ல ஆரம்பித்தனர்.

ஜனவரி முதல் வாரம் வரை கேட்டதும் ஒரு முகமூடி 3 முதல் 5 ரூபாய்க்கு  கிடைத்த நிலை மாறியது. இது ஒன்று இரண்டு என்று சில்லறையாக வாங்கும் போது. மொத்தமாக 100முகமூடிகள் கொண்ட பாக்ஸ் வாங்கினால் 160, 180 ரூபாய்க்கு  கிடைத்தது குறிப்பிடத்தக்கது. அதற்கிடையில் வழக்கமான 2அடுக்கு, 3  அடுக்கு கொண்ட சர்ஜிகல் முகமூடிகள் பலன் தராது என்95 முகமூடிகள் நல்லது என்று தகவல் பரவியது. அடுத்த ஓரிரு நாட்களில் என்95 வகை விற்பனைக்கு வந்து  விட்டன. அதனை குறைந்த 250, 350 ரூபாய்க்கு விற்க ஆரம்பித்து  விட்டனர். கூடவே பதுக்கி வைத்திருந்த 2,3 அடுக்கு முகமூடிகளை 25, 30 ரூபாய்க்கு விற்க தொடங்கினர்.

இத்தனைக்கும்  2, 3அடுக்கு முகமூடிகளை  ஒருமுறை, அதிலும் அதிகபட்சமாக நான்கைந்து மணி நேரம் மட்டுமே பயன்படுத்த வேண்டும். என்95 முகமூடிகளை துவைத்து மீண்டும் பயன்படுத்தலாம். கடந்த  சில நாட்களாக அரசு விழித்துக் கொண்டு கொரோனா தொற்றை தடுக்க பல்வேறு  நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் முகமூடிகளின் விலையும் வேகமெடுக்க தொடங்கி விட்டன. இப்போது பல மருந்து கடைகளில் 3 அடுக்கு முகமூடிகள் 50 ரூபாய் விற்கப்படுகிறது. அதேபோல் என்95 முகமூடிகளில் 500 ரூபாயை  தொட்டு விட்டது. இத்தனைக்கும் முகமூடிகளை பதுக்குபவர்கள் மீதும், அதிக விலைக்கு விற்பவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ளன.

அதேபோல் மத்திய உணவுத் துறை அமைச்சகம்  3 அடுக்கு வரை உள்ள முகமூடிகளை 10 ரூபாய்க்கு மேல் விற்கக் கூடாது என்ற உத்தரவையும் பிறப்பித்துள்ளது. ஆனால் அவையெல்லாம் வெறும் அறிவிப்புகளாக  இருக்கின்றன. அதனால் மக்களின் பயத்தை பயன்படுத்தி எரிந்த வீட்டில்  பிடுங்கிய வரை லாபம் என்ற நோக்கில் மருந்துக் கடைகள், நிறுவனங்கள் கொள்ளையடிக்கின்றன. மத்திய, மாநில அரசுகள் வழக்கம் போல் கண்டுக் கொள்ளாமல்  இருக்கின்றன.

துவைச்ச மாஸ்க்
3 அடுக்கு  முகமூடிகளை தொடர்ந்து அதிகபட்சம் நான்கைந்து மணி நேரம் மட்டுமே அணியலாம்  என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். அதனால் பொருளாதார, தட்டுப்பாடு  பிரச்னை காரணமாக பொதுமக்கள் மட்டுமின்றி, மருத்துவர்களும்  பல மணி நேரம்  அதை அணிந்துக் கொள்ளும் நிலை. இந்நிலையில் கடைகளில் பலரும் 3  அடுக்கு முகமூடிகளையே அதிகம் வாங்குகின்றனர். சில மருந்துக் கடைக்காரர்கள்,  ‘அதையே வாங்காதீங்க... யாராவது யூஸ் பண்ணி போட்டதை,  துவைச்சி அயர்ன்  போட்டு விக்கிறாங்க. அதனால என்95 வாங்குங்க’ என்று பயமுறுத்துகின்றனர்.

ஆன்லைன் கொள்ளை
மருந்துக்கடைகள்  முகமூடிகள் விற்பனையில் ஒரு பக்கம் கொள்ளையடித்தால், ஆன் லைன் நிறுவனங்கள்  இன்னொரு பக்கம் சுரண்டுகின்றன. 3 அடுக்கு முகமூடிகளை ஆன் லைன் நிறுவனங்கள்  குறைந்தது 100 ரூபாய்க்கு விற்கின்றன. கேட்டால் டெலிவிரி கட்டணமும்  சேர்த்து என்கின்றன. அதேபோல் மறுபடியும் பயன்படுத்தக் கூடிய என்95 வகை  முகமூடிகள் 300 முதல் அதிகபட்சமாக 3490 ரூபாய்க்கும் விற்கின்றன.

தொழிற்சாலை முகமூடிகள்
பிரபல  மருந்துகடைகளில் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் முகமூடி(இண்டஸ்டீரியல்  மாஸ்க்)களை என்95முகமூடிகள் என்று  விற்பனை செய்கின்றன. இவை 100 முதல் 150  ரூபாய்க்கு விற்கப்படுகின்றன. ஆனால் ‘இவை என்95போல் பாதுகாப்பான அம்சங்கள்  கொண்டதில்லை’ என்கின்றனர்.

சில கடைகள்...
அதிசயமாக சில  மருந்துக்கடைகள் என்95 முகமூடிகளை 75, 100 ரூபாய்க்கு விற்பனை செய்கின்றன.  கூடவே அங்கிருப்பவர்கள், ‘கைக்குட்டையை கட்டிகிட்டா கூட போதுங்க... டெய்லி  துவைச்சி பயன்படுத்தலாம் பிரச்னை இருக்காது என்றும் ஆதரவாக பேசுகின்றனர்.

Tags : rupee mask ,Government ,Unseen ,Drugstores ,Mask , Robbery, Drugstores, Mask, Government
× RELATED ஆன்லைன் சூதாட்டம் பற்றி...