×

கொரோனா பீதி எதிரொலியால் வரத்து குறைந்தது; காய்கறிகள் விலை இரு மடங்காக உயர்வு: கோயம்பேடு மார்க்கெட்டில் அலைமோதும் மக்கள் கூட்டம்

சென்னை: கொரோனா பீதி எதிரொலியால் வெளி மாநிலங்களில் இருந்து காய்கறிகள் வரத்து குறைந்ததால் கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் விலை திடீரென உயர்ந்துள்ளது. இந்த நிலையில் 144 தடை உத்தரவு காரணமாக கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் வாங்க நேற்றைப்போல இன்றும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த தமிழக அரச சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, பள்ளி, கல்லூரிகள், வணிக வளாகங்கள், தியேட்டர்கள், மெட்ரோ ரயில்கள் வருகிற 31ம் தேதி வரை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வெளிமாநிலங்களில் இருந்து தமிழக எல்லை பகுதிகளுக்குள் வாகனங்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் இன்று மாலை 6 மணி முதல் மார்ச் 31ம் தேதி வரை 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து மாநிலம் முழுவதும் பஸ், டாக்ஸி, ஆட்டோக்கள் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பால், காய்கறி, மருந்து, மளிகை கடைகள் தவிர மற்ற அனைத்து கடைகளும்  மூடப்படுகிறது. இந்த நிலையில் இன்று மாலை 144 தடை விதிக்கப்பட்ட நிலையில் நேற்று கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது. இந்த நிலையில் இன்றும் காலை முதலே கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி வாங்க மக்கள் அதிகளவில் வந்தனர். இந்த நிலையில் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலத்தில் இருந்து காய்கறி வரத்து குறைந்ததால் கோயம்பேட்டில் காய்கறிகள் விலை நேற்றைய தினத்தை காட்டிலும் இன்று உயர்ந்துள்ளது. பீன்ஸ் 1 கிலோ ரூ.20ல் இருந்து ரூ.60 ஆகவும், பச்சை பட்டாணி ரூ.40ல் இருந்து ரூ.60 ஆகவும், உருளைகிழங்கு ரூ.20ல் இருந்து ரூ.40 ஆகவும்,

முட்டைகோஸ் ரூ.8ல் இருந்து ரூ.10 ஆகவும், கத்திரிக்காய் ரூ.20ல் இருந்து ரூ.40 ஆகவும், அவரைக்காய் ரூ.25ல் இருந்து ரூ.60 ஆகவும், முள்ளங்கி ரூ.10ல் இருந்து ரூ.30 ஆகவும், தக்காளி ரூ.20ல் இருந்து ரூ.30 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் மற்ற காய்கறிகள் நேற்றைய விலையில் தான் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதாவது, கேரட் ரூ.20, பீட்ரூட் ரூ.15, பாகற்காய் ரூ.35, வெண்டைக்காய் ரூ.20, புடலைங்காய் ரூ.15, இஞ்சி ரூ.60, சேனைக்கிழங்கு ரூ.20, சேப்பங்கிழங்கு ரூ.35, கோவக்காய் ரூ.20, குடமிளகாய் ரூ.25, முருங்கைக்காய் ரூ.30, காலிபிளவர் ரூ.30க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது குறித்து கோயம்பேடு ெமாத்த காய்கறி மார்க்கெட் மொத்த வியாபாரிகள் சங்க ஆலோசகர்  சவுந்தரராஜன் கூறியதாவது: கொரோனா வைரஸ் பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

மறைந்த திமுக தலைவர் கருணாநிதி கடந்த 1996ல்  கோயம்பேடு மார்க்கெட்டை திறந்தார். அப்போது மார்க்கெட்டை பார்க்க வாகனங்களில் மக்கள் வந்து, காய்கறிகளை வாங்கி சென்றனர். கொரோனா பீதியில் கோயம்பேடு மார்க்கெட்டிற்கு கூட்டம், கூட்டமாக மக்கள் காய்கறி வாங்க வந்துள்ளனர். நேற்றும், இன்றும் மார்க்கெட்டில் பொதுமக்கள் கூட்டம் அதிகளவில் உள்ளது. கோயம்பேட்டில் காய்கறி விலை மலிவு. ஆனால், வெளிக்கடைகளில் இரண்டு மடங்கு விலை வைத்து விற்பனை செய்கின்றனர். கோயம்பேடு மார்க்கெட்டிற்கு கடந்த வாரம் 350 லாரிகளில் ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து காய்கறிகள் வந்தது. ஆனால், இன்று 200 லாரிகள் தான் வந்துள்ளது. அதற்கு காரணம், காய்கறியை கொண்டு சென்றால் இறக்குவார்களா, இல்லையா என்ற பீதியால் காய்கறி அனுப்புவதை குறைத்து விட்டனர்.

அதனால், தற்போது காய்கறிகள் விலை கூடியுள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டை நம்பி 20 லட்சம் பேர் பிழைக்கின்றனர். எல்லோரும் ஏழை நடுத்தர மக்கள் தான். ஓட்டேரி, புரசைவாக்கம், தண்டையார்பேட்டை, வண்ணாரப்பேட்டை, திருவொற்றியூர், மந்தைவெளி, அடையாறு, திருவான்மியூர், தரமணி, தாம்பரம் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து வரும் சிறிய கடைக்காரர்கள் கோயம்பேட்டில் காய்கறிகளை வாங்கி வந்து விற்பனை செய்கின்றனர். அவர்களுக்கு இது தான் வாழ்வாதாரமாக உள்ளது. எனவே, கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டிற்கு வெளிமாநிலங்களில் இருந்து காய்கறி கொண்டு வரப்பட வேண்டும். கோயம்பேடு மார்க்கெட் வழக்கம் போல் செயல்பட்டால் அனைவரும் பிழைக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Corona ,Coimbatore , Corona, Vegetables, Raising, Coimbatore Market
× RELATED மேற்படிப்பை முடித்த பின் அரசு...