×

கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரிப்பு: 144 தடை உத்தரவு எதிரொலியாக தமிழகம் முழுவதும் பேருந்து சேவை நிறுத்தம்...மீண்டும் ஏப்.1-ல் இயக்கம்

சென்னை: உலகம் முழுவதும் 185 நாடுகளுக்கும் மேல் கொரோனா வைரஸ் பரவி மிகவும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை 3,78,829-க்கும் மேற்பட்டவர்கள் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சை பலனின்றி  16,510 பேர் பலியாகி உள்ளனர். இந்தியாவில் இதுவரை 10 பேர் பலியாகி உள்ளனர். தமிழகத்திலும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு 15 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் நாடு முழுவதும்  தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் (22ம் தேதி) காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மக்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வராமல் முழு ஒத்துழைப்பு அளித்தனர். ஆனாலும்,  நோய் தொற்று அதிகரிக்கலாம் என்ற அச்சம் காரணமாக பல்வேறு மாநிலத்தில் வருகிற 31ம் தேதி வரை ஊடரங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில், வருகிற 31ம் தேதி வரை பள்ளி, கல்லூரிகள், வணிக வளாகங்கள், தியேட்டர்கள், மின்சார ரயில், மெட்ரோ ரயில், வெளியூர் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. கொரோனா வைரசால் தமிழகத்தில் ஒரு  உயிரை கூட இழப்பதற்கு தயாராக இல்லை. அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றுகிறோம்.இது மிகப்பெரிய நோய். சவாலாக எடுத்து தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று முதல்வர்  எடப்பாடி பழனிசாமி நேற்று பேரவையில் தெரிவித்தார்.

மேலும், மத்திய அரசால் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்ட நபர்கள் உள்ள மாவட்டங்களான சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு உள்பட தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும், போக்குவரத்து மற்றும் பொதுமக்களின்  நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, தொற்று நோய்கள் சட்டத்தின்படி மாவட்ட எல்லைகளை மூட உத்தரவிடப்படுகிறது. இந்த உத்தரவு இன்று (24ம்தேதி) மாலை 6 மணி முதல் தொடங்கி 31.3.2020 வரை நடைமுறையில் இருக்கும். அத்தியாவசிய  மற்றும் அவசர பணிகள் தவிரமற்ற பொது போக்குவரத்து, தனியார் போக்குவரத்து, ஆட்டோ, டாக்ஸி போன்றவை இயங்காது. மாநிலங்களுக்கு இடையேயும், மாவட்டங்களுக்கு இடையேயும் ஆன போக்குவரத்து அத்தியாவசிய இயக்கத்திற்கு  தவிர மற்ற இயக்கம் முற்றிலும் தடை செய்யப்படுவதாக உத்தரவிட்டார்.

தொடர்ந்து, சென்னையில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு செல்ல பொதுமக்கள் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அலை மோதின. சென்னையில் இருந்து அரசு பேருந்துகளில் இதுவரை 1.48 லட்சம் பேர் வெளியூர்களுக்கு பயணம்  செய்துள்ளனர். முதல்வர் அறிவித்தப்படி, இன்று மாலை முதல் தமிழகத்தில் 144 தடை உத்தரவு அமலாவதால் சென்னையிலிருந்து திருச்சி, மதுரைக்கான பேருந்து சேவைகள் கடந்த சில மணி நேரத்திற்கு முன்பு நிறுத்தப்பட்டன. தொடர்ந்து, தமிழகம் முழுவதும் பேருந்துகள் அந்த அந்த பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ளது. மீண்டும் பேருந்துகள் ஏப்ரல் 1-ம் தேதி இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : bus stops ,Tamil Nadu , Continuous increase in corona impact: 144 bus stops across Tamil Nadu
× RELATED சதுப்பு நிலங்களை அடையாளம் காணும்...