×

மதுவாங்குவதில் போட்டா போட்டி: டாஸ்மாக் கடைகளில் அலைமோதிய கூட்டம்: n கொரோனாவை கண்டுகொள்ளாத குடிமகன்கள்: கடன் வாங்கி மதுவை வாங்கி வீட்டில் குவித்தனர்

சென்னை: கொரோனா பரவலை அலட்சியப்படுத்தி நேற்று டாஸ்மாக் கடைகளில் குடிமகன்கள் நீண்ட வரிசையில் நின்று மதுவாங்கி சென்றனர். தமிழகத்தில் கொரோனா தாக்கம் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் தமிழக அரசு மார்ச் 31ம் தேதி வரையில் 144 உத்தரவை பிறப்பித்துள்ளது. அத்தியாவசிய தேவைகள் உள்ள கடைகள் தவிர அனைத்து கடைகளும் மூடப்படும். இதற்கு முன்னதாக சுய ஊரடங்கின்போது தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டது. இந்தநிலையில், நேற்று டாஸ்மாக் கடைகள் திறந்ததும் குடிமகன்கள் காலை 10மணி முதலே கடைகளின் முன்பு வரிசை கட்டி நின்றனர். அவர்களை போலீசார் ஒழுங்குபடுத்தினர்.

சரியாக 12 மணிக்கு மதுக்கடைகள் திறக்கப்பட்டதும் ஒருவரை ஒருவர் முண்டியடித்துக்கொண்டு மதுபானங்களை வாங்கிச்சென்றனர். கொரோனாவின் தாக்கத்தை கொஞ்சம் கூட செவிகொடுக்காமல், அலட்சியப்படுத்தி மதுவாங்க கூட்டம் கூட்டமாக கடைகளின் முன்பு திரண்டதால் பல இடங்களில் பரபரப்பு ஏற்பட்டது. 22ம் தேதி ரூ.220 கோடிக்கு மது விற்பனை நடைபெற்ற நிலையில் நேற்றும் மதுவாங்க கூட்டம் அலைமோதியதால் மதுவிற்பனை கணிசமாக அதிகரித்திருக்கும் என கூறப்படுகிறது. மேலும் பலர் வட்டிக்கு கடன் வாங்கி இரண்டுக்கும் மேற்பட்ட மதுபாட்டில்களை வீட்டிற்கு வாங்கிச் சென்றனர். இதற்கு டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்ற அச்சமே காரணமாக கூறப்படுகிறது.

இதுகுறித்து, டாஸ்மாக் ஊழியர்கள் கூறியதாவது: கொரோனா தொற்றை கருத்தில் கொண்டு டாஸ்மாக் கடைகளுக்கு முன்பாக 1 மீட்டர் இடைவெளி விட்டு கோடு மற்றும் கட்டம் போட்டு அதில் நின்று மதுவகைகளை வாங்கிச்செல்ல வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. ஆனால், இதை யாரும் பின்பற்றவில்லை. முண்டியத்துக்கொண்டே மதுவகைகளை வாங்கிச்சென்றனர். அனைத்திலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டு வரும் தமிழக அரசு மதுக்கடைகளை மார்ச் 31ம் தேதி வரையில் மூடுவதற்கு மட்டும் தயக்கம் காட்டி வருகிறது. கொரோனா தொற்று சமூக பரவலாக பரவக்கூடிய இந்த சூழலில் இதுபோன்று டாஸ்மாக் கடைகளை திறந்துவைப்பது சரியான நடவடிக்கையாக இருக்காது. எனவே, உடனடியாக டாஸ்மாக் கடைகளை மார்ச் 31ம் தேதி வரையில் மூட வேண்டும். இவ்வாறு கூறினர்.

Tags : crowd , Tasmac, crowd , corona
× RELATED பூங்காவனத்தம்மன் கோயில் திருவிழா...