×

கடந்த 3 ஆண்டுகளில் செம்மொழிகள் வளர்ச்சிக்கு செலவழித்த பணம் எவ்வளவு?: மக்களவையில் எம்.பி. தயாநிதிமாறன் கேள்வி

புதுடெல்லி: சமஸ்கிருதம், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஒடியா போன்ற செம்மொழிகளின் வளர்ச்சிக்கு கடந்த 3 ஆண்டுகளில் செலவு செய்த மொத்த தொகை விவரங்களை தெரிவிக்க வேண்டும் என மக்களவையில் திமுக எம்.பி. தயாநிதி மாறன் கேள்வி எழுப்பினார். மக்களவையில் திமுக எம்.பி. தயாநிதிமாறன் எழுத்துப்பூர்வமாக கேட்ட கேள்விகள்:சமஸ்கிருதம், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஒடியா போன்ற செம்மொழிகளின் வளர்ச்சிக்கு கடந்த 3 ஆண்டுகளில் செலவு செய்த மொத்த நிதி எவ்வளவு? எந்தெந்த வழிமுறைகளில் மேற்கண்ட மொழிகள் வளர்க்கப்படுகின்றன என்ற விவரத்தை மொழி வாரியாக, ஆண்டு வாரியாக, மாநில வாரியாக தெரிவிக்க வேண்டும். மேற்கண்ட மொழிகளை எவ்வளவு பேர் தாய் மொழியாக பயன்படுத்துகின்றனர்? எதன் அடிப்படையில் ஒவ்வொரு மொழிக்கும் நிதி ஒதுக்கப்படுகிறது? சமஸ்கிருத வளர்ச்சிக்கும், இதர மொழிகளின் வளர்ச்சிக்கும் ஒதுக்கீடு செய்யும் நிதியில் மிகப்பெரிய வித்தியாசம் இருப்பதற்கான காரணங்கள் என்ன? இதர செம்மொழிகளை புறக்கணித்துவிட்டு, சமஸ்கிருதத்தின் வளர்ச்சிக்கு மட்டும் அதிக நிதி ஒதுக்குவது ஏன்?

இவ்வாறு தயாநிதிமாறன் கேள்விகள் எழுப்பினார். இதற்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அளித்த பதிலில் கூறியதாவது:செம்மொழிகள் உட்பட அனைத்து மொழிகளையும் வளர்ப்பதுதான் மத்திய அரசின் கொள்கை. செம்மொழிகள் உட்பட அனைத்து மொழிகளின் வளர்ச்சிக்கும் இந்திய மொழிகள் மையம்(சிஐஐஎல்) பணியாற்றுகிறது. செம்மொழி தமிழ் வளர்ச்சிக்கு, செம்மொழி தமிழ் மத்திய மையம்(சிஐசிடி) என்ற தனி மையம் செயல்படுகிறது. சமஸ்கிருதத்தை 3 நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் மூலம் மத்திய அரசு வளர்க்கிறது. இங்கு சமஸ்கிருதம் கற்பிக்கப்பட்டு ஆராய்ச்சி படிப்பு மேற்கொள்ளப்படுகிறது. மாணவர்களுக்கு பட்டங்கள், டிப்ளமோக்கள், சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. சமஸ்கிருதத்துக்கு செம்மொழி நோக்கில் எந்த தனி நிதியும் வழங்கப்படவில்லை. அதேபோல் செம்மொழி மலையாளம், ஒடியா ஆகியவற்றுக்கும் தனி நிதி இதுவரை வழங்கப்படவில்லை.
கன்னட மொழிக்கு கடந்த 2016-17ம் ஆண்டில் ₹91 லட்சமும், 2017-18ம் ஆண்டில் ₹92 லட்சமும், 2018-19ம் ஆண்டில் ₹92 லட்சமும் வழங்கப்பட்டுள்ளது. தெலுங்கு மொழிக்கு கடந்த 2016-17ம் ஆண்டில் ₹1 கோடியும், 2017-18ம் ஆண்டில் ₹1 கோடியும், 2018-19ம் ஆண்டில் ₹99 லட்சமும், தமிழ் மொழிக்கு கடந்த 2016-17ம் ஆண்டில் ₹5.02 கோடியும், 2017-18ம் ஆண்டில் ₹10.27 கோடியும், 2018-19ம் ஆண்டில் ₹5.45 கோடியும் வழங்கப்பட்டுள்ளது. செம்மொழிகள் மையத்துக்கு, அதன் தேவைகள் அடிப்படையில் இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : spent,development,classics,last 3 years, Dayanidhimaran Question
× RELATED பெண்களை ஏமாற்றி பணம் பறித்து மோசடி...