×

தாம்பரம்- சின்னமலை இடையே மந்தகதியில் சாலை விரிவாக்க பணி: வாகன ஓட்டிகள் தவிப்பு

வேளச்சேரி: தாம்பரம் - சின்னமலை வரை உள்ள வேளச்சேரி மெயின் ரோட்டில், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் தொடங்கிய விரிவாக்க பணிகள் இதுவரை முடியாமல் மந்தகதியில் நடந்து வருவதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். சென்னை புறநகர் பகுதிகளை இணைக்கும் முக்கிய சாலையாக தாம்பரம் - வேளச்சேரி மெயின் சாலை  உள்ளது. கிழக்கு தாம்பரத்தில் ரயில்வே தண்டவாளம் அருகில் தொடங்கி, கிழக்கு தாம்பரம், சேலையூர், செம்பாக்கம், வேங்கைவாசல், மேடவாக்கம், ஜல்லடியான்பேட்டை, பள்ளிக்கரணை, வேளச்சேரி குருநானக் கல்லூரி வழியாக சின்னமலை வரை சுமார் 16 கிமீ தூரத்துக்கு இந்த சாலை செல்கிறது. இந்த சாலையையொட்டி மாநகராட்சி வார்டுகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள் உள்ளன. சென்னைக்கு அருகில் இந்த பகுதிகள் அமைந்துள்ளதால், சில ஆண்டுகளில் இப்பகுதியில் குடியேறிய மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால், வணிக வளாகங்களும் பெருகி வருகின்றன.

மேற்கண்ட பகுதி மக்கள் வேளச்சேரி ரயில் நிலையம், சைதாப்பேட்டை, தேனாம்பேட்டை மற்றும் சென்னையில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு சென்றுவர  இது முக்கிய சாலையாக உள்ளது.மேலும் இந்த சாலையுடன் பல இணைப்பு சாலைகள் இணைவதால், இந்த சாலையை பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. இவ்வழியே செல்லும் அரசு பஸ்கள் மற்றும் தனியார் வாகனங்களின் எண்ணிக்கையும் பெருகியுள்ளன. இதையொட்டி, கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.இதையடுத்து இருவழி சாலையாக இருந்த இச்சாலையை 6 வழிச் சாலையாக விரிவுப்படுத்த கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்,  நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்து, அதற்கான பணிகளையும் தொடங்கியது. ஆனால், வேளச்சேரி மேம்பாலத்தில் இருந்து பள்ளிக்கரணை மேம்பாலம் வரை மற்றும் சில பகுதிகளில் மட்டுமே 6 வழி சாலை முழுமையாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

ஆனால் மேடவாக்கம் பஜார் முதல் நாராயணபுரம் பஸ் நிறுத்தம் வரை சுமார் 2 கிமீ தூர சாலை இதுவரை ஆரம்ப கட்டத்திலேயே உள்ளது. விரிவுப்படுத்தப்பட்ட சில இடங்களிலும் பள்ளம் மேடாக இருப்பதால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கின்றனர். அடிக்கடி விபத்துக்களும் ஏற்படுகின்றன.சாலை விரிவாக்கப்பணிக்காக நிலம் வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நில உரிமையாளர்கள் சிலர், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கும், நிலுவையில் உள்ளதாக கூறி, அதிகாரிகள் காலம் கடத்துவதாகவும், பத்திரிகையில் செய்தி வரும்போது மட்டும் சாலை விரிவாக்கப்பணி செய்வதும், பின்னர் கிடப்பில் போடுவதுமாக உள்ளனர் என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.எனவே, சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகள், மேற்கண்ட சாலையை ஆய்வு செய்து, ஆமை வேகத்தில் நடக்கும் சாலை விரிவாக்ப்பணியை விரைந்து முடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனா்.Tags : Thambaram-Chinnamalai ,Road , Road widening , Thambaram,Chinnamalai road
× RELATED கொரோனா பாதிப்பில் நிதியின்றி...