×

புறநகர் பகுதி கட்டுமான பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்கள் தகர கொட்டகைகளில் தஞ்சம்: அடிப்படை வசதியின்றி அவதி

ஆவடி: சென்னை புறநகர் பகுதிகளில் நடக்கும் கட்டுமான பணிகளுக்காக வட மாநில தொழிலாளர்கள் கொத்தடிமைகள் போல தகர கொட்டகைகளில் தஞ்சமடைந்துள்ளனர். இவர்கள் அடிப்படை வசதிகள் இல்லாமல் அவதிப்படுவதால், மாவட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை புறநகர் பகுதிகளான ஆவடி, திருமுல்லைவாயல், பட்டாபிராம், திருநின்றவூர், திருவேற்காடு, போரூர் மாங்காடு, குன்றத்தூர், பூந்தமல்லி, புழல், செங்குன்றம், தாம்பரம்,  பல்லாவரம், மேடவாக்கம் பள்ளிக்கரணை, செம்பாக்கம், பெருங்களத்தூர், வண்டலூர், பெருங்குடி உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான அடுக்குமாடி குடியிருப்புகள் புதிதாக கட்டப்பட்டு வருகின்றன. இந்த கட்டுமான பணியில் தமிழகம் மட்டுமின்றி, வட மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான ஆண், பெண் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இங்கு வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு தேவையான இருப்பிடம், குடிநீர், மருத்துவம், மின்சாரம், தொழிலாளர் குழந்தைகளுக்கு கல்வி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை அந்தந்த தனியார் கட்டுமான நிறுவனங்கள் செய்து தருவது இல்லை.

இந்த கட்டுமான தொழிலாளர்களை ஒப்பந்ததாரர்கள் கொத்தடிமைகள் போல நடத்தி வேலை வாங்கி வருவதுடன், அவர்களுக்கு கட்டிட பணி நடைபெறும் இடத்திலேயே தகர கொட்டகைகள் அமைத்து, தங்க வைத்து விடுகின்றனர். இதோடு அவர்களது கடமை முடிந்ததாக கருதி விடுகின்றனர். மேலும், அவர்களுக்கு எந்த அடிப்படை வசதிகளையும் செய்து கொடுப்பதில்லை. இவ்வாறு, அவர்கள் கொளுத்தும் வெயிலில் தினமும் பல மணி நேரம் வேலை பார்க்கின்றனர். மேலும், அவர்கள் அதிகாலையில் திறந்தவெளி கழிப்பறையை தேடி, பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீருடன் அலையும் அவலமும் நிகழ்கிறது.
மேலும், அவர்கள் பல மணி நேரம் கட்டிட பணிகளை கொளுத்தும் வெயிலில் வேலை பார்த்துவிட்டு இரவில் தகர கொட்டகைக்கு தூங்க வருகின்றனர். ஆனால் அங்கு காற்றோட்ட வசதி இல்லாததாலும், கொசு தொல்லையாலும் தூக்கம் இழந்து தவிக்கின்றனர். இதனால் அவர்கள் நிம்மதியாக தூங்குவதற்கு டாஸ்மாக் கடைகளில் குறைந்த விலைக்கு மதுவை வாங்கி, குடித்து வருவதால் அவர்களுக்கு பல்வேறு வகையான உடல்நலக் கோளாறுகள் ஏற்படுகிறது. மேலும், சுகாதாரமற்ற தகர கொட்டகையில் கோடை காலங்களில் வசிக்கும் கட்டுமான தொழிலாளர்களுக்கு அம்மை நோய், கொப்பளம், வாந்தி, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் பல தொழிலாளர்களின் உயிர் பலி சத்தமின்றி அமைதியாக நடைபெற்று வருவதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

எனவே, மேற்கண்ட சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கட்டுமான தொழிலாளர்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பணியிடங்களில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

மாமூல் வசூல்
சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘‘வெளிமாநில கட்டுமான தொழிலாளர்களை 12 மணி நேரத்திற்கு மேல் வேலை வாங்கிவிட்டு அதற்குரிய ஊதியத்தை கொடுப்பது இல்லை. இதுகுறித்து அவர்கள் யாரிடமும் புகார் தெரிவிப்பது இல்லை.  இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டிய சம்பந்தப்பட்ட அரசு துறையினர் கட்டுமான நிறுவனங்களிடம் மாமூல் வாங்கிவிட்டு கண்டு கொள்வதில்லை. இதனால் அதிக பணி சுமையால் அடிக்கடி உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது. மேலும் தொழிலாளர்களின் குடும்பத்தை சேர்ந்த பெண்களுக்கு  பாலியல் தொல்லை கொடுக்கும் சம்பவங்களும் அதிகரித்து வருகிறது’’ என்றனர்.

Tags : Workers engaged , suburban construction , Asylum in tin sheds
× RELATED கியூட், நெட் தேர்வுகளுக்கான மதிப்பெண்களை சமப்படுத்தும் முறை நீக்கம்