×

ஊரடங்கு உத்தரவு எதிரொலி சொந்த ஊருக்கு படையெடுத்த தென்மாவட்ட மக்கள்: பெருங்களத்தூர், தாம்பரத்தில் நெரிசல்

பல்லாவரம்: தமிழகம் முழுவதும் வரும் 31ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், வெளியூர்வாசிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல தாம்பரம் பேருந்து நிலையத்தில் நேற்று குவிந்தனர்.உலகமெங்கும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதுவரை பல்வேறு நாடுகளில் இந்த நோயின் தாக்குதலுக்கு உள்ளாகி சுமார் 14 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளனர். மேலும், 3 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் இந்நோயின் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர். தமிழகத்திலும் இதுவரை 8 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்த நோய் மேலும் பரவாமல் தடுக்க அரசு பல்வேறு முயற்சிகளை மத்திய மாநில அரசுகள் எடுத்து வருகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை மத்திய அரசு சுய ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது. இருப்பினும் இந்த நோயின் தாக்கம் குறையவில்லை, தமிழகத்தில் உள்ள சென்னை, காஞ்சிபுரம் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்கள் உட்பட இந்தியா முழுவதும் மொத்தம் 75 மாவட்டங்கள் அரசின் தீவிர கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது.

அதன் அடிப்படையில் இன்று மாலை ஆறு மணி முதல் வரும் 31ம் தேதி வரை தமிழக அரசு 144 தடை உத்தரவு பிறப்பித்தது. மருந்து, பால், காய்கறி, மளிகைப் பொருட்கள் போன்ற அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்க அரசு அறிவுறுத்தியுள்ளது.இதையடுத்து பல தனியார் நிறுவனங்கள், கம்பெனிகள் அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில், சென்னையில் தங்கியுள்ள வெளியூர்வாசிகள் பீதியடைந்து தங்களது சொந்த ஊருக்கு செல்வதற்காக நேற்று மாலை முதல் தாம்பரம், பெருங்களத்தூர் ஆகிய பகுதிகளுக்கு குவிந்தனர்.  ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள், திருச்சி, மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய தங்களது ஊருக்கு செல்வதற்காக திரண்டதால் தாம்பரம், பெருங்களத்தூர் ஆகிய பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஏற்கனவே கொரோனா பீதியில் தமிழக அரசு குறைந்த அளவு மட்டுமே பேருந்துகள் இயக்கிய நிலையில், கிடைக்கும் வேன், சரக்கு லாரி உள்ளிட்ட வாகனங்களில் தொற்றிக்கொண்டு பயணிகள் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்வதை காண முடிந்தது.

பொதுமக்களின் இந்த திடீர் கூட்டத்தை கண்டதும், ஒரு சில தனியார் ஆம்னி பேருந்துகள் டிக்கெட் விலையை ரூ.1500 முதல் ரூ.2500 வரை, தங்களது இஷ்டத்திற்கு விற்க தொடங்கினர். அதிகாரிகளும் இந்த விலை ஏற்றத்தை கண்டுகொள்ளவில்லை. இருப்பினும் மக்கள் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் தங்களது சொந்த ஊருக்கு சென்றால் போதும் என்ற எண்ணத்தில் மட்டுமே இருந்தனர். இதனால் திரும்பிய பக்கமெல்லாம் மக்கள் தலைகளாக காட்சியளித்தது. மேலும் பேருந்துகளில் கட்டுக்கடங்காமல் கூட்டத்தில், பயணிகள் பேருந்தின் மேற்கூரை வரை ஏறிச் செல்வதை காண முடிந்தது. அதேபோல் காய்கறிக்கடை, மளிகைக்கடைகளில் மக்கள் கூட்டம் வழக்கத்திற்கு மாறாக அலைமோதியது. பலர் அரசின் அறிவிப்புகளை கவனத்தில்கொள்ளாமல் ஊரடங்கு உத்தரவு என்றால் தங்களுக்கு எதுவும் கிடைக்காது என்ற அச்சத்தில், 10 நாள்களுக்குத் தேவையான பொருட்களை, தங்களது வீடுகளில் மொத்தமாக வாங்கி இருப்பு வைக்கும் வகையில் வாங்கிச் சென்றனர். இதனை பயன்படுத்திக் கொண்டு வியாபாரிகளும் வழக்கமாக விற்கும் விலையைக் காட்டிலும் கூடுதல் விலைக்கு பொருட்களை விற்பனை செய்தனர். ஊரடங்கு உத்தரவு காரணமாக சென்னையில் அத்தாவசிய பொருட்கள் கிடைக்காமல் தவிக்கும் நிைல ஏற்படலாம் என கருதி வெளிமாநில மக்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுத்த சம்பவம் சென்னைவாசிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Tambaram ,hometown , curfew echoes ,peopl, hometown,congestion, Perungalthur, Tambaram
× RELATED தமிழகத்தில் மேலும் 1286 பேருக்கு கொரோனா?.....