×

தடுப்பு நடவடிக்கை திருப்தியளிக்கிறது உச்ச நீதிமன்றம் கருத்து

புதுடெல்லி:  மத்திய அரசு மேற்கொண்டுள்ள கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் திருப்தி தருகிறது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.  நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 9 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 300க்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ரயில்கள் ரத்து, விமான சேவை நிறுத்தம், ஏசி மால்கள் மூடல் என பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை மத்திய அரசு மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதா என கண்டறிவதற்கான ஆய்வுக்கூடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் மற்றும் மத்திய மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அறிவுறுத்த வேண்டும் என கோரி உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான நீதிபதிகள் எல்.என்.ராவ் மற்றும் சூர்யகாந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுக்களை விசாரித்த நீதிபதிகள் அமர்வு, “நாட்டில் தற்போது நிலவும் சூழலை எதிர்க்கொள்வதற்கு அரசு மிகவும் துரிதமாக செயல்பட்டு வருகிறது. கொரோனா தடுப்பு தொடர்பான அரசு நடவடிக்கைகள் திருப்தி தருவதாக உள்ளது. அரசினை விமர்சிப்பவர்கள் கூட அரசு சிறப்பான பணியை செய்வதாக கூறுகின்றனர். இது அரசியல் அல்ல. உண்மை” என்று உத்தரவிட்டனர்.

கைதிகளை பரோலில் விடுவிக்க உத்தரவு
கொரோனா வைரஸ் பரவி வருவதால் சிறைக் கைதிகளை பரோலில் விடுவிப்பதற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக சிறைகளில் அதிக நபர்கள் இருப்பதை தவிர்க்கும் வகையில் நடவடிக்கை எடுக்க மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி 7 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருப்பவர்களுக்கு 4 முதல் 6 வாரங்கள் வரை பரோல் வழங்க அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக மாநில மற்றும் யூனியன் பிரதேசங்கள் உயர்நிலை குழு அமைக்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்ற வளாகம் மூடல்
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக உச்ச நீதிமன்றம் நேற்று பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. இதன்படி, இன்று மாலை முதல் நீதிமன்ற வளாகத்தை சுற்றி அமைந்துள்ள அனைத்து வழக்கறிஞர்கள் அலுவலகங்களையும் மூட வேண்டும். வழக்கறிஞர்கள் நீதிமன்றத்துக்கு வருவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் தற்காலிகமாக ரத்து செய்யப்படுகின்றது. உச்ச நீதிமன்ற பார் அசோசியேஷன் தலைவர் துஷ்யந்த் தேவ், அவசர காரணங்களுக்காக உச்ச நீதிமன்றத்துக்கு வரும் வழக்கறிஞர்களுக்கு அனுமதியளிப்பதற்கான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அடுத்த உத்தரவு வரும் வரை வழக்கறிஞர்கள் நீதிமன்ற வளாகத்தில் ஒன்றாக கூடுவதற்கு தடை விதிக்கப்படுகின்றது. மனுவின் தன்மை கருதி அவசர வழக்குகளை மற்றும் நீதிமன்றம் விசாரிக்கும்”  என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


Tags : Supreme Court , Supreme Court, Federal Government, Corona Virus
× RELATED புலம்பெயர் தொழிலாளர்கள் நடந்து...