×

செய்தி துளிகள்

மக்கள் அஜாக்கிரதையால் பல மாநிலங்களில் ஊரடங்கு
மகாராஷ்டிரா  மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களையும் சீல்வைக்க முதல்வர் உத்தவ் தாக்கரே  உத்தரவிட்டுள்ளார். மாவட்ட நுழைவு வாயில்கள் அனைத்தும்  சீல்வைக்கப்பட வேண்டும் என்றும், வெளிமாவட்ட வாகனங்கள் அனுமதிக்கப்படக்  கூடாது என்றும் அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கு முதல்வர் உத்தவ் தாக்கரே  நேற்று மாலை உத்தரவு பிறப்பித்தார். இதேபோல், பஞ்சாப், ஆந்திரா, கேரள மாநிலங்களும் முழு ஊரடங்கை நேற்று இரவு முதல் அமல்படுத்தியுள்ளது. அத்தியாவசிய சேவைகள் அளிக்கும் துறையை, தவிர இங்கு வேறு எதுவும் செயல்படாது.

மேகாலயாவில் அரசு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு
ஷில்லாங்: நாடு முழுவதும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் தீவிரப்படுத்தி உள்ளன. இந்நிலையில், மேகாலயாவில் 12ம் வகுப்பு பொது தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இங்கு கடந்த 2ம் தேதி 12ம் வகுப்பு அரசு பொது தேர்வு தொடங்கியது. 30,697 பேர் இந்த தேர்வை எழுதுகின்றனர். ேநற்று தேர்வு நடைபெற இருந்தது. மேலும் இன்று மற்றும் நாளை தேர்வுகள் நடைபெற இருந்தது. இத்துடன் தேர்வுகள் முடிவடைய இருந்தன.
இந்நிலையில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கை எதிரொலியாக 12ம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக மாநில கல்வி வாரியம் அறிவித்துள்ளது. மேலும், உடடினயாக விடைத்தாள் மதிப்பீடு செய்யும் பணிகளும் ஒத்திவைக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தைரியமாக செயல்படுங்கள்- ப.சிதம்பரம்
புதுடெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் தைரியமாக செயல்படுங்கள் என தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ப.சிதம்பரம் தனது டிவிட்டர் பதிவில், “இத்தாலியிடம் இருந்து பாடத்தை கற்றுக் கொள்ளுங்கள். ஒருங்கிணைப்பு இல்லாத துண்டு துண்டான நடவடிக்கைகள் நோய் பரவுதலுக்கு காரணமாக உள்ளன. தைரியமாக செயல்படுங்கள். இப்போதே செயல்படுங்கள். ஒரு வாரமாக நாடு முழுவதும் அனைத்தையும் மூடும்படி நான் கோரிக்கை விடுத்துவந்தேன். ஆனால், அதை ஏளனமாக கருதி, எனது கோரிக்கை கிடப்பில் போடப்பட்டது. மிகப்பெரிய பொருளாதார வலி இருக்கிறது. ஆனால் பொருளாதார விளைவுகளை கூட கையாண்டுவிட முடியும். நேரடி உயிரிழப்புக்களை கையாளுவது மிகவும் கடினமாகும் ” என்று கூறியுள்ளார்.

நோயாளிகள் பெயரில் பயணிகளை ஏற்றிச்செல்லும் ஆம்புலன்ஸ்கள்
திருமலை: ஐதராபாத்தில் நோயாளிகள் பெயரில் ஆம்புலன்ஸ் உரிமையாளர்கள் பயணிகளை ஏற்றிச்சென்று வருகின்றனர். ஆந்திரா, தெலங்கானா இரண்டு மாநிலங்களிலும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் ரயில், பஸ்கள், டாக்சி உள்ளிட்டவை நிறுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் தனியார் ஆம்புலன்ஸ் உரிமையாளர்கள்  நோயாளிகளை ஏற்றிச் செல்வது போன்று பயணிகளை ஏற்றிச் சென்று வருகின்றனர். ஐதராபாத்தில் இருந்து விஜயவாடாவிற்கு வந்த ஒரு ஆம்புலன்சில் 1000 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு பயணிகளை ஏற்றிச் சென்று வருகின்றனர். இந்நிலையில் சூரியபேட்டை  அருகே நேற்று போலீசார் சோதனையில் இது  கண்டுபிடிக்கப்பட்டு ஆம்புலன்சை நிறுத்தி அதில் இருந்தவர்கள் அனைவரும் கீழே இறக்கி விடப்பட்டனர்.  பொதுமக்கள் நலன் கருதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில்  சில ஆம்புலன்ஸ் உரிமையாளர்கள் பணத்திற்காக இவ்வாறு செய்வதால் வைரஸ் பரவுவதை தடுப்பதில் அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags : states , Many states, curfew, corona
× RELATED இஸ்ரேல் மீது ட்ரோன், ஏவுகணை தாக்குதலை தொடங்கியது ஈரான்