×

144 தடை உத்தரவால் புறநகர் பகுதிகளில் உள்ள கடைகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்

ஆவடி: கொரோனா பாதிப்பை தடுக்க தமிழக அரசின் 144 தடை உத்தரவால் சென்னை புறநகர் பகுதியில் உள்ள கடைகளில் பொருட்களை வாங்க பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது. இதனால், கடைக்காரர்களும், பொதுமக்களுக்கும் இடையே  சில இடங்களில் வாக்குவாதம், தகராறு ஏற்பட்டது. மேலும், முக்கிய பொருட்கள் கிடைக்காமல் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் சென்றனர். தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால் 9 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பலர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். இந்த வைரஸ் பரவுவதை தடுக்கும் பொருட்டு, தமிழகத்தில் இன்று முதல் 31ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.மேலும், பொதுமக்கள் அத்தியாவாசிய பணிகளை தவிர, மற்ற எந்த பணிகளுக்கும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. இதையடுத்து, மாநிலம் முழுவதும் எல்லைகளை மூடவும் முடிவு செய்ள்ளது.

இதையொட்டி, சென்னை புறநகர் பகுதிகளான ஆவடி, திருமுல்லைவாயல், பட்டாபிராம், திருநின்றவூர், முத்தாப்புதுபேட்டை, மிட்டனமல்லி, கோயில்பதாகை, பூந்தமல்லி, மாங்காடு, போரூர், குன்றத்தூர், நசரத்பேட்டை மற்றும் ஊராட்சி பகுதிகளில் பொதுமக்கள் ஒரு வாரத்துக்கு வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்க கூட்டம் கூட்டமாக மளிகை கடை, காய்கறி கடை, மருந்துக்கடைகள் ஆகிய கடைகளில் திரண்டனர். அப்போது, கடைக்காரர்களிடம் போட்டி போட்டு, முண்டியடித்து பொருள்களை வாங்கி சென்றனர். இதனால் கடைக்காரருக்கும், பொது மக்களுக்கு இடையே சில இடங்களில் வாக்குவாத்துடன் தகராறும் ஏற்பட்டது. இதுமட்டுமின்றி, கடைக்காரரிடம் இருந்து யார் முதலில் பொருட்களை வாங்குவது என்பதில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஒரு சில இடங்களில், பொதுமக்களுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டது.

அத்தியாவாசிய பொருட்களான பால், முக கவசம், கையுறை, சானிடைசர் ஆகியவை கிடைக்காமல் தட்டுப்பாடு ஏற்பட்டது. மேலும், மருந்து கடைகளிலும் சானிடைசர் இருப்பு இல்லை என அறிவிப்பு பலகை தொங்க விடப்பட்டது. இதனால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் தங்கள் வீடுகளுக்கு திரும்பினர்.

Tags : crowds ,stores ,suburbs , 144 Prohibition order, suburbs, crowds
× RELATED மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க...