×

கொரோனா வைரஸ் பீதி மாவட்ட எல்லையில் பாதுகாப்பு பணி தீவிரம்

சென்னை: கொரோனா வைரஸ், மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் நேற்று முன்தினம் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும், மத்திய அரசு, நாடு முழுவதும் 75 மாவட்டங்களை முடக்கியுள்ளது. இதில், தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய 3 மாவட்டங்கள் அடங்கியுள்ளது. இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தின் எல்லையில் பாதுகாப்பை பலப்படுத்த கலெக்டர் ஜான் லூயிஸ், எஸ்பி கண்ணன் ஆகியோர் தலைமையில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மாவட்டத்தின் எல்லையான சென்னையையொட்டி உள்ள மீனம்பாக்கம், கானத்தூர், நாவலூர், குன்றத்தூர், படப்பை மற்றும் காஞ்சிபுரத்தையொட்டி உள்ள தாம்பரம், மேல்மருவத்தூர், புக்கத்துரை, வேடந்தாங்கல், பழையசீவரம், ஒரகடம் ஆகிய இடங்களில் பாதுகாப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

அனைத்து வாகனங்களை பலத்த சோதனைக்கு பிறகே மாவட்டத்துக்குள் அனுப்ப முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.  ஒடிசா, மத்திய பிரதேசம் ஆகிய பகுதிகளை சேர்ந்த தொழிலாளர்கள் 300க்கும் மேற்பட்டோர் கடந்த 22ம் தேதி கேரளா செல்வதற்காக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தனர். அன்றைய தினம் ஊரடங்கு அமலில் இருந்ததால், இந்தியா முழுவதும் அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டன.இதனால், மேற்கண்ட தொழிலாளர்கள் கேரளா செல்ல முடியாமல் தவித்தனர். மேலும், ரயில்கள் இயக்க வலியுறுத்தி ரயில்வே அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த சுகாதாரத்துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து, அவர்களை மீட்டு வியாசர்பாடி, சத்தியமூர்த்தி நகரில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் தங்கவைத்தனர்.

பின்னர் தமிழகத்தின் பல பகுதிகளுக்கு அவர்கள் பிரித்து அனுப்பி வைக்கப்பட்டனர். அதில் 96 பேர் மட்டும் வியாசர்பாடி முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு மருத்துவ பரிசோதனை, முக கவசங்கள் வழங்குவது ஆகிய பணிகளை சுகாதாரத்துறையினர் மேற்கொண்டனர். ரயில்கள் இயக்கப்படும் வரை 96 பேரும் முகாமில் தங்க வைக்கப்படுவார்கள் என அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Tags : border ,Corona Virus Panic District ,Security Work Intensifies ,Corona Virus Panic District Border , Corona virus, district boundary, security work intensity
× RELATED தமிழக-கேரள எல்லையில் சீசன் நிறைவு;...