×

கடம்பூரில் காய்ச்சல், மூச்சுத் திணறலுடன் தங்கியிருந்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 3 பேருக்கு கொரோனா அறிகுறி?

* கோவில்பட்டி மருத்துவமனையில் அனுமதி
* அலட்சியமாக செயல்பட்ட அதிகாரிகளால் ஆபத்து


கோவில்பட்டி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே வாஞ்சிமணியாச்சி பகுதியில், நெல்லை - மதுரை இடையே  இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்தப் பணிகளில் மேற்கு வங்கம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 60க்கும் மேற்பட்ட வாலிபர்கள் பணியாற்றி வருகின்றனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு மேற்குவங்க மாநிலத்தில் இருந்து மேலும் 22 வாலிபர்கள், இந்த பணிக்காக வாஞ்சி மணியாச்சிக்கு வந்தனர். இவர்களைப் போல, கோவில்பட்டி, ஒட்டனத்தம், தூத்துக்குடி ஆகிய ஊர்களுக்கும் பல இளைஞர்கள் இரு நாட்களுக்கு முன்னர் அழைத்து வரப்பட்டனர். அதில், வாஞ்சி மணியாச்சி அடுத்துள்ள கோடங்கால் அரசு மாணவர் விடுதி அருகே தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள தகர கொட்டகையில் 22க்கும் மேற்பட்டவர்கள் தங்கி பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் புதிதாக வந்தவர்களில் 9 பேருக்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்தது.

இவர்களுக்கு கடம்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 3 பேருக்கு இருமல், சளி, காய்ச்சல் பாதிப்பு அதிகம் இருந்தது. இதையடுத்து, மேற்குவங்க மாநிலம் குதாப்சகாலி பகுதியைச் சேர்ந்த இருவரும், ஜத்ரதல்காலைச் சேர்ந்த ஒருவரும் மேல்சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு 3 பேரின் ரத்தம், சளி போன்றவை பரிசோதனைக்கு எடுக்கப்பட்டு நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கொரோனா சிறப்பு ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட 3 பேருடன் மேலும் 12 பேர் தங்கியிருந்துள்ளனர். இதையடுத்து அவர்கள் 12 பேரும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

தகவலறிந்த தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி, கோவில்பட்டி மருத்துவமனைக்கு  வந்து 3 பேருக்கும் அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கடந்த 3 வாரங்களுக்கு முன்பே பரவி விட்டது. நமது நாட்டில் கடந்த 2 வாரங்களாக தீவிரம் காட்டி வருகிறது. அதேநேரத்தில் தமிழகத்திலும் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் வெளிநாடு மற்றும் வெளிமாநிலத்தில் இருந்து வந்தவர்கள்தான் பாதிக்கப்பட்டவர்கள். இது வெளியில் தெரிந்தும், மேற்கு வங்கத்தில் இருந்து 60க்கும் மேற்பட்டவர்களை ரயில்வே தண்டவாளம் அமைக்கும் பணிக்காக 2நாட்களுக்கு முன்னர் கான்ட்ராக்ட் எடுத்தவர் அழைத்து வந்துள்ளார். இது குறித்து தமிழக அதிகாரிகளுக்கு முறைப்படி தெரிவிக்கவில்லை. அதோடு, காய்ச்சல் ஏற்பட்டதும், முதலில் கடம்பூர் அரசு மருத்துவமனை டாக்டருக்கு கான்ட்ராக்டர் போன் செய்து பேசியுள்ளார்.

டாக்டர் மற்றும் செவிலியர்கள் அவர்களை மருத்துவமனைக்கு அழைத்து வரச் சொல்லாமல், அவர்கள் தங்கியிருந்த ஷெட்டுக்குச் சென்று  விழிப்புணர்வு பிரசாரம் செய்துள்ளனர். பின்னர் தொடர்ந்து காய்ச்சல் இருந்ததால், கோவில்பட்டி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இவ்வாறு கான்ட்ராக்டர், மருத்துவர்கள் என்று அனைவரும் அஜாக்கிரதையாக இருந்துள்ளனர். இந்த நோய் பற்றிய தகவல் வெளியானதும், கடம்பூர் பகுதி மக்கள் கடும் பீதியில் உள்ளனர். கொரோனா வைரஸ், கடம்பூர் பகுதி மக்களுக்கு பரவினால் அதற்கு அரசுதான் பொறுப்பு என்று பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

ஆயுதப்படை காவலருக்கு சிகிச்சை  
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம், ஆசிரியர் குடியிருப்பு வசந்தம் நகரை சேர்ந்த ஆயுதப்படை காவலர் ஒருவர், வத்திராயிருப்பில் பணியாற்றி வருகிறார். கோவையில் பாதுகாப்பு பணிக்காக சென்று வீடு திரும்பிய இவருக்கு கடந்த 6 நாட்களாக காய்ச்சல், தும்மல் இருந்துள்ளது. இதையடுத்து விருதுநகர் எஸ்பி பெருமாள் உத்தரவின்பேரில், ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் இருந்து இவர் மேல் சிகிச்சைக்காக மதுரை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

Tags : West Bengal Kadampur , Fever, wheezing in Kadampur, West Bengal, Corona
× RELATED கார், வேன் மோதி தீப்பிடித்து எரிந்தது