×

6 ஆண்டு ஏற்றங்கள் முற்றிலுமாக சரிந்தது: பங்குச்சந்தையில் இமாலய வீழ்ச்சி 14 லட்சம் கோடி இழப்பு

* வர்த்தகம் 2வது முறையாக நிறுத்திவைப்பு
* ஒரே மாதத்தில் 56.84 லட்சம் கோடி போச்சு
* ரூபாய் மதிப்பு 76.20 ஆனதால் அதிர்ச்சி

மும்பை: பங்குச்சந்தைகள் நேற்று ஒரே நாளின் மிக கடுமையான சரிவை சந்தித்தன. சென்செக்ஸ் 4,000 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது. கடந்த ஆண்டு ஏற்றம் முற்றிலுமாக முடிவுக்கு வரும் வகையில் ஏற்பட்ட இந்த மோசமான வீழ்ச்சியால், முதலீட்டாளர்களுக்கு பங்குச்சந்தை தொடங்கிய சில நிமிடங்களிலேயே 10 லட்சம் கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டது. வர்த்தக முடிவில் இந்த இழப்பு 14,22,207.01 கோடியாக இருந்தது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் முதலீட்டாளர்களுக்கு 56,84.129.03 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.  மத்தியில் பாஜ தலைமையில் முதன் முதலாக 2014 மே 26ம் தேதி ஆட்சி அமைக்கப்பட்டது. பிரதமராக நரேந்திரமோடி பதவியேற்றார். தற்போது 2ம் முறையாக கடந்த ஆண்டு பாஜ கூட்டணி மத்தியில் மீண்டும் ஆட்சியை அமைத்துள்ளது.

 பாஜ ஆட்சி அமைந்த பிறகு, பங்குச்சந்தையில் ஏற்ற இறக்கங்கள் இருந்தபோதும், அதிகபட்சமாக மும்பை பங்குச்சந்தை குறியீடு சென்செக்ஸ் 42,000 புள்ளிகளை கடந்தது. இதுபோல், தேசிய பங்குச்சந்தை நிப்டி 12,430 புள்ளிகளை தாண்டி கடந்த ஜனவரியில் புதிய உச்சம் தொட்டது.  இருப்பினும், தொழில்துறைகள் பின்னடைவு, பொருளாதார மந்தநிலை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பங்குச்சந்தையில் கடந்த 2 ஆண்டுகளாகவே ஸ்திரமற்ற நிலைதான் காணப்படுகிறது.
தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பால் ஏற்பட்ட பீதியும் சேர்ந்து கொண்டதால், பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் ஒவ்வொரு நாளும் கடுமையான இழப்பால் அதிர்ச்சியில் ஆழ்ந்து வருகின்றனர்.  கடந்த மாதம் 20ம் தேதியில் இருந்து இதுவரை ₹56,84.129.03 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று மும்பை பங்குச்சந்தை துவங்குவதற்கு முன்பே 2,307.16 புள்ளிகள் சரிந்து 27,608.80 புள்ளிகளாக இருந்தது.

அதிகபட்சமாக 4,035.13 புள்ளிகள் சரிந்து, 25,880.83 புள்ளிகளாக இருந்தது. அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வர்த்தக முடிவில் 76.20 ஆக சரிந்தது. பங்குச்சந்தை துவங்கியபோது மும்பை பங்குச்சந்தை 2,600 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது. தேசிய பங்குச்சந்தை நிப்டி 8,000 புள்ளிகளுக்கு கீழ் சென்றது. சென்செக்ஸ் 10 சதவீதத்துக்கு கீழ் சரிந்ததால், இழப்பை தடுக்க வர்த்தகம் 45 நிமிடங்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டது. இவ்வாறு நிறுத்தப்படுவது இந்த மாதத்தில் 2வது முறை. இருப்பினும், துவக்க நிலையிலேயே முதலீட்டாளர்களுக்கு சுமார் 10 லட்சம் கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டது. அதாவது, 116.09 லட்சம்  கோடியாக இருந்த பங்கு மதிப்பு 105.91 லட்சம் கோடியாக ஆனது.

 ரிலையன்ஸ், எச்டிஎப்சி, ஐசிஐசிஐ, ஆக்சிஸ் வங்கி, ஐடிசி, கோடக் வங்கி, டிசிஎஸ், பஜாஜ் பைனான்ஸ் ஆகியவற்றின் பங்குகள் கடும் பாதிப்பை அடைந்தன. பின்னர் 45 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்பட்ட வர்த்தகம் காலை 10.57க்கு துவங்கியது. அதன்பிறகும் சரிவு நிற்கவில்லை. 4,035.13 வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 3,934.72 சரிந்து 25,981.24 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீடு நிப்டி, அதிகபட்சமாக 7,583.60 புள்ளிகள் வரை சென்றது. வர்த்தக முடிவில், 1,135.20 புள்ளிகள் சரிந்து 7,610.25 ஆக இருந்தது. 2008, அக்டோபர் 24ம் தேதிக்கு பிறகு நிப்டியில் ஏற்பட்ட மிகப்பெரிய சரிவாக இது பார்க்கப்படுகிறது.

எல்ஐசிக்கு 2 லட்சம் கோடி நஷ்டம்
எல்ஐசி நிறுவனம் பல்வேறு நிறுவனங்களில் பங்குச்சந்தையில் முதலீடு செய்துள்ளது. இந்தியாபுல்ஸ் ஹவுசிங் பைனான்ஸ், ரிலையன்ஸ் கேபிடல் மற்றும் வீடியோகான் இன்டஸ்ட்ரீஸ் உள்ளிட்டவை இதில் அடங்கும். சுமார் 304 நிறுவனங்களில் ஒரு சதவீதத்துக்கு மேலான பங்குகளை எல்ஐசி வாங்கியுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் 31ம் தேதிப்படி, எல்ஐசி முதலீடு செய்துள்ள பங்குகளின் மதிப்பு 6.04 லட்சம் கோடியாக இருந்தது. இது கடந்த 20ம் தேதி நிலவரப்படி 4.2 லட்சம் கோடியாகிவிட்டது. அதாவது ஏறக்குறைய 30 சதவீதத்துக்கு மேல் சரிந்து விட்டது. அதோடு, நேற்றும் பங்குச்சந்தைகளில் இமாலய சரிவு ஏற்பட்டுள்ளது. இதையும் சேர்த்து எல்ஐசிக்கு இந்த ஆண்டில் 2 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது என சந்தை புள்ளி விவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.



Tags : collapse ,-olds ,stock market collapse ,Himalayan , Stock market, fall
× RELATED தபால் வாக்கு மூலம் முதியோர் வாக்களிப்பதற்கான வயது வரம்பு 85-ஆக உயர்வு!