×

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக ஒலிம்பிக் போட்டி ஒத்திவைப்பு? ஜப்பான் பிரதமர் அபே தீவிர ஆலோசனை

டோக்கியோ: உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் அதிகரித்து வரும் சூழலில் ‘ஒலிம்பிக் போட்டியை தள்ளி வைப்பது தவிர்க்க முடியாததாகிவிடும்’ வாய்ப்புள்ளதாக ஜப்பான் பிரதமர் அபே அறிவித்துள்ளார். இந்த ஆண்டு கோடைகால ஒலிம்பிக் விளையாட்டு போட்டித் தொடர் ஜூலை 24ம் தேதி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் தொடங்க உள்ளது.  அதற்கான முன்னேற்பாடுகளில் ஜப்பானும், சர்வதேச ஒலிம்பிக் கவுன்சிலும் (ஐஓசி) தீவிரமாக உள்ளன. ஆனால், அதிகரித்து வரும் கொரோனா தொற்று பீதி காரணமாக ஒலிம்பிக் போட்டியை தள்ளிவைக்க வேண்டும் என்று விளையாட்டு அமைப்புகள், வீரர்கள் மற்றும் பிரபலங்கள் வலியுறுத்தி வருகின்றனர். எனினும் போட்டியை திட்டமிட்டபடி நடத்துவதில் ஜப்பானும், ஐஓசியும் உறுதியாக இருந்து வந்தன. கிரீசின் பண்டைய ஒலிம்பியாவில் ஏற்றப்பட்ட ஒலிம்பிக் சுடரும் ஜப்பான் வந்து சேர்ந்து விட்டது. ஜப்பானில் ஒலிம்பிக் பணிகள் தொய்வின்றி தொடர்கின்றன.

விலகியது கனடா: இந்நிலையில் கனடா நாட்டு ஒலிம்பிக், பாரா ஒலிம்பிக்  சங்கங்கள், ‘இந்த ஆண்டு ஒலிம்பிக், பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்பட்டால் கனடா அதில் பங்கேற்காது’ என்று அறிவித்துள்ளன. அதேபோல் ஆஸ்திரேலிய ஒலிம்பிக் சங்கம், ‘2021ம் ஆண்டு நடைபெற உள்ள டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கு தடகள வீரர்கள் தயாராகுங்கள்’ என்று சில நாட்களுக்கு முன்பு அறிவுறுத்தியுள்ளது. அதனால் இந்த ஆண்டு ஒலிம்பிக் போட்டி நடக்காது என்பதை ஆஸ்திரேலிய ஒலிம்பிக் சங்க  அறிவிப்பு எதிரொலிக்கிறது. ஆனால் ஐஓசி தலைவர் தாமஸ் பாக், ‘ஒலிம்பிக் போட்டியை ரத்து செய்வது பிரச்னைகளுக்கு தீர்வாகாது. அதனால் போட்டியை நடத்துவதற்கான பணிகள் தொடர்கின்றன’ என்று கூறியிருந்தார். அதே நேரத்தில் தாமஸ் பாக் சில நாட்களுக்கு முன்பு விளையாட்டு வீரர்களுக்கு எழுதிய கடிதமொன்றில், ‘விளையாட்டு போட்டிகளை நடத்துவதை விட மனித வாழ்க்கை முக்கியமானது’ என்று எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில்  ஜப்பான் நாடாளுமன்றத்தில் பேசிய அந்நாட்டு பிரதமர் ஷின்சோ அபே, ‘முழுமையான விளையாட்டு போட்டியை நடத்த திட்டமிட்டுள்ளோம். ஆனால் அது கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடினமாகி உள்ளது. வீரர்களின் நலனை கருத்தில் கொண்டு ஒலிம்பிக் போட்டியை தள்ளிவைக்க வேண்டியது தவிர்க்க முடியாததாகிவிடும் வாய்ப்புள்ளது. அதே நேரத்தில் போட்டியை கைவிடும் திட்டம் ஏதுமில்லை. அதனால் பிரச்னையும் தீராது. யாருக்கும் பலன் தருவதாகவும் இருக்காது’ என்று கூறியுள்ளார்.

இதுவரை ஜூலை 24ம் தேதி திட்டமிட்டபடி ஒலிம்பிக் போட்டி தொடங்கும் என்று உறுதியாக சொல்லப்பட்டு வந்துள்ள நிலையில், ஜப்பான் பிரதமரின் பேச்சு அதை மாற்றியுள்ளது. எனவே கொரோனா பீதி காரணமாக போட்டி ஒத்தி வைக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. அதே சமயம், குறைந்தது 4 வாரங்கள் நிலைமையை கண்காணிக்க ஜப்பான் அரசு, ஐஓசி திட்டமிட்டுள்ளதால் தள்ளிவைக்கும் அறிவிப்பு உடனடியாக வராது என்றே தெரிகிறது.


Tags : Abe ,Olympic ,Japan , World, Corona, Olympic competition, Prime Minister of Japan, Abe
× RELATED பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கான தீபம்...