×

இன்று காலை 6 மணி முதல் மார்ச் 31 நள்ளிரவு வரை பெங்களூருவில் ஊரடங்கு உத்தரவு: கொரோனா பரவலை தடுக்க மாநில அரசு நடவடிக்கை

பெங்களூரு: கர்நாடகாவில் கொரோனா பரவலை தடுக்க நேற்று முன்தினம் பெங்களூரு உள்பட 9 மாவட்டங்கள் முடக்கப்பட்டு சீல் வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் நேற்று பெங்களூரு மாநகரில் வழக்கம் போல் கடைகள் திறந்திருந்தது. போக்குவரத்து இயங்கின. பஸ்களில் கூட்டம் நிரம்பி வழிந்தது. ஓலா, ஊபர், ஆட்டோவில் இருமடங்கு கட்டணம் வசூலிக்கப்பட்டு மக்களை ஏற்றிச்சென்றனர். இது கடும் விமர்சனத்துக்குள்ளானது. இதை தொடர்ந்து முதல்வர் எடியூரப்பா போலீஸ் மற்றும் அரசு உயரதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். கொரோனா பரவலை தடுக்க 9 மாவட்டங்கள் முடக்கப்பட்டும் மக்கள் ஒத்துழைக்கவில்லை. அதிகாரிகளும் கண்டுக்கொள்ளவில்லை என்று வேதனை தெரிவித்தார். இதை தொடர்ந்து இன்று காலை 6 மணி முதல் மார்ச் 31 நள்ளிரவு வரை பெங்களூருவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மற்ற மாவட்டங்களிலும் இதே நிலை பின்பற்றப்பட வேண்டும்.  இந்த  சமயத்தில் பஸ் போக்குவரத்து முழுமையாக ரத்து செய்யப்படும். ஓலா, ஊபர்,  உள்ளிட்ட டாக்சி சேவைகள், ஆட்டோ சேவைகள் ரத்து செய்யப்படுகிறது. சரக்கு  வாகன போக்குவரத்தும் ரத்து செய்யப்படுகிறது.இதற்கிடையே, மைசூருவில் மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி  செய்யப்பட்டுள்ளது என்று மாவட்ட கலெக்டர் அபிராம் ஜி சங்கர் தெரிவித்தார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: துபாயில் இருந்து கேரள மாநிலம் வழியாக மைசூருவுக்கு ஒருவர் வந்தார். அவர் பரிசோதனைக்காக கே.ஆர்.மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது அவர் தனிமை வார்டில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார்.

கொரோனா பாதிப்பு குறித்து போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் யாரும் வீட்டைவிட்டு வெளியே வரவேண்டாம் என்று கூறினாலும், யாரும் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. இதனால், கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மைசூருவில் இரண்டாவது கொரோனா பாதிப்பு உறுதியானதால் அனைத்து ஆன்மிக தலங்கள் மார்ச் 31ம் தேதி மூட வேண்டும் என்றார். இந்நிலையில் மாநிலம் முழுவதும் 31ம் தேதி நள்ளிரவு வரை ஊரடங்கு அமல்படுத்த முதல்வர் எடியூரப்பா அறிவித்துள்ளார்.

Tags : Bengaluru ,State Government ,Corona , Bengaluru, Corona, State Govt
× RELATED ஊரடங்கை ரத்து செய்யக்கோரிய வழக்கு தள்ளுபடி