×

பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க 15 சதவீத உற்பத்தியை அரசுக்கு தர வேண்டும்: குடிநீர் உற்பத்தியாளர்களுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: பொதுமக்களுக்கு கோடை வெயிலில் குடிநீர் வழங்கும் வகையில், குடிநீர் உற்பத்தி நிறுவனங்கள் தங்களது மொத்த உற்பத்தியில் 15 சதவீதத்தை அரசுக்கு வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோதமாக நிலத்தடி நீரை எடுக்கும் குடிநீர் ஆலைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், உரிமம் இல்லாமல் நிலத்தடி நீர் எடுக்கும் குடிநீர் ஆலைகள் மூட உத்தரவிட்டது. பின்னர், உரிமம் கோரி விண்ணப்பித்த குடிநீர் அலைகளிடம் 50 ஆயிரம் ரூபாய் டெபாசிட்  பெற்று விண்ணப்பங்களை பரிசீலிக்கவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த வழக்கு, நீதிபதிகள் கோத்தாரி மற்றும் சுரேஷ்குமார் அடங்கிய அமர்வு கடந்த வாரம் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்தது. அதில், நிலத்தடி நீர் எடுக்க உரிமம் கேட்டு 1,054 விண்ணப்பங்கள் வர பெற்றுள்ளது. அதில் 690 விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலிக்க தகுதி உடையதாக உள்ளன.  நிலத்தடி நீர் இருப்பு அளவை அறிந்து அதன் அடிப்படையில் உரிமம் வழங்குவதற்கு மூன்று மாத கால அவகாசம் வழங்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், இரண்டு வாரங்களில் உரிமம் கோரிய விண்ணப்பங்களை பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

தவறினால் சம்பந்தப்பட்ட துறை ஊழியர் முதல் அதிகாரிகள் வரை ரூ. 50 ஆயிரம் அபராதம் செலுத்த நேரிடும் என்றனர். இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் சார்பில் அட்வகேட் ஜெனரல் விஜய்நாராயண் ஒரு அறிக்கையை தாக்கல் செய்தார். அதில், குடிநீர் உற்பத்தி செய்ய அனுமதி கேட்டு, ஆயிரத்து 54 விண்ணப்பங்கள் வந்துள்ளன. இதில் 690 யூனிட்டுகள் தகுதியுள்ளவையாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த 690 யூனிட்டுகளில் 121 யூனிட்டுகளுக்கு தடையில்லா சான்று வழங்கப்பட்டுள்ளது.

கோடை வெயிலின் தாக்கத்தை கருத்தில் கொண்டு ஏற்கனவே செயல்பட்டு வரும், நிறுவனங்களுக்கான அனுமதியை ஜூலை மாதம் வரை தளர்த்த அரசு முடிவு செய்துள்ளது. பொதுமக்களின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு, குடிநீர் உற்பத்தி நிறுவனங்கள் தங்களின் மொத்த உற்பத்தியில், 15 சதவீதத்தை அரசுக்கு வழங்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதனை பதிவு செய்த நீதிபதிகள், குடிநீர் உற்பத்தி நிறுவனங்கள் தங்களின் உற்பத்தியில், 15 சதவீதத்தை அரசுக்கு வழங்க வேண்டும். அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் சம்பந்தப்பட்ட, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குடிநீரை பெற்று நிர்வகிக்க வேண்டும்.

மாநகராட்சிகளில் கமிஷனர்கள் இதற்கு பொறுப்பேற்க வேண்டும். பொதுமக்களின் குடிநீர் தேவையைகருத்தில் கொண்டு இலவசமாக குடிநீர் வழங்கும் வகையில் அரசு இந்த ஏற்பாடை செய்துள்ளது. குடிநீர் நிறுவனங்களில் உற்பத்தி மற்றும் அரசுக்கு தரும், 15 சதவீதம் ஆகியவற்றை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். வழக்கு வரும் ஏப்ரல் 28ம் தேதி தள்ளிவைக்கப்படுகிறது என்று உத்தரவிட்டனர்.


Tags : public ,Drinking Water Manufacturer ,Government ,High Court , Drinking Water, Production, Government, Drinking Water Manufacturer, High Court
× RELATED வெயிலின் தாக்கம் அதிகரிப்பு அம்மை...