×

'உற்பத்தி செய்யும் நீரில் 15% தமிழக அரசுக்கு இலவசமாக வழங்குக': உரிமம் இல்லாத குடிநீர் ஆலைகள் நிபந்தனையுடன் ஜூலை 31 வரை இயங்க அனுமதி

சென்னை : கொரோனா அச்சுறுத்தல் மற்றும் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு உரிமம் பெறாத குடிநீர் ஆலைகள் வருகிற ஜூலை 31ம் தேதி வரை இயங்க தற்காலிக அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதே சமயம் உற்பத்தி செய்யும் குடிநீரில் 15% தமிழக அரசுக்கு இலவசமாக வழங்க குடிநீர் ஆலைகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது. இதைத் தொடர்ந்து குடிநீர் ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கு ஏப்ரல் 28ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.

*தமிழகத்தில் சட்டவிரோதமாக நிலத்தடி நீரை உறிஞ்சும் ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டு இருந்தது. இந்த வழக்கில் சட்ட விரோதமாக இயங்கப்பட்ட ஆலைகள் தங்கள் விண்ணப்பத்தை பரிசீலிக்க கோரி தமிழக அரசுக்கு இரண்டு வாரம் அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது.

*இதனிடையே  தமிழகத்தில் மட்டும் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் 8 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் கொரோனவை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனிடையே நாளை மாலை 6 மணி முதல் மார்ச் 31ம் தேதி வரை தமிழகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

*இந்த நிலையில் சட்டவிரோதமாக இயங்கிய குடிநீர் ஆலைகளை மூடக்கோரிய சிவமுத்து என்பவரது வழக்கு, நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் சுரேஷ்குமார் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.  அப்போது கொரோனா அச்சுறுத்தல் மற்றும் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு உரிமம் பெறாத குடிநீர் ஆலைகள் இயங்க தற்காலிக அனுமதி வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நிலத்தில் இருந்து சுத்தப்படுத்தி எடுக்கும் நீரின் அளவை பொறுத்து மார்ச் 31ம் தேதி வரை அதில் 15 சதவிகிதத்தை அரசுக்கு வழங்க வேண்டும் என்றும் இதுகுறித்த நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது. இதையடுத்து இந்த வழக்கு ஏப்., 28 ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.


Tags : Govt ,Tamil Nadu ,Government of Tamil Nadu , 'Provide 15% of the generated water to the Government of Tamil Nadu free'
× RELATED பாதிக்கப்பட்டவர்களுக்கு இறுதி...