×

கொரோனாவை தடுக்க கடும் நடவடிக்கை: நாளை முதல் மார்ச் 31 வரை மாவட்ட எல்லைகளை மூட முதல்வர் பழனிசாமி உத்தரவு

சென்னை: சீனாவில் முதலில் பரவிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் 192க்கும் மேற்பட்ட நாடுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. உலகளவில் கொரோனா வைரசுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 14,616 ஆக உயர்ந்துள்ளது.  இதுவரை 3,36,838 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் 416க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை 7 பேருக்கு கொரோனா நோய் இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த வைரஸ் மேலும் பரவாமல் இருக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை  எடுத்து வருகிறது. இதற்கிடையே, பிரதமர் மோடியின் வேண்டுகோளை தடுக்க நேற்று காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மக்கள் ஊரடங்கு உத்தரவு தமிழகம் முழுவதும் நேற்று கடைப்பிடிக்கப்பட்டது. தொடர்ந்து, இன்று காலை 5 மணி  வரை நீடிப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதன்படி இன்று காலை வரை ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி தமிழகம் முழுவதும் ரயில், பஸ், ஆட்டோ, கார்கள் எதுவும் இயக்கப்படவில்லை. எக்ஸ்பிரஸ்,  மெயில் உள்பட அனைத்து ரயில்களும், வருகிற 31ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக இந்தியன் ரயில்வே அறிவித்துள்ளது.

இந்த நிலையில் கொரோனா பாதிப்பு மேலும் பரவாமல் இருக்க இந்தியாவில் 75 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவை வருகிற 31ம் தேதி வரை நீட்டிக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு ஆலோசனை வழங்கியது. மத்திய  அரசின் சுகாதாரத்துறை அறிவித்த 75 மாவட்டங்களின் பட்டியலில் தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு மாவட்டங்கள் இடம் பெற்றுள்ளன.

இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். மேலும், நாளை மாலை 6 மணி முதல் மார்ச் 31-ம் தேதி வரை அனைத்து மாவட்ட  எல்லைகளையும் மூடப்படும் என்று தெரிவித்துள்ளார். அத்தியாவசிய பொருட்கள் விற்பனை கடைகளை தவிர மற்ற கடைகள் இயங்காது. அத்தியாவசிய போக்குவரத்து மட்டும் அனுமதிக்கப்படும். அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ளும்  துறைகள் இயங்கும். அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயங்காது. பொதுப்போக்குவரத்து, தனியார் வாகனங்கள், கார்கள், ஆட்டோக்கள் ஓடாது. மளிகை, பால், காய்கறி, மீன், இறைச்சி உள்ளிட்ட கடைகள் மட்டும் இயங்க அனுமதிக்கப்படும்.  ஆக மாவட்ட நிர்வாகம், காவல்துறை, தீயணைப்புத்துறை, மருத்துவத்துறை, நீதிமன்றம் மட்டும் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும்,விரிவான அறிக்கை மாலை வெளியிடப்படும் என்றும் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.


Tags : கொரோனாவை தடுக்க கடும் நடவடிக்கை: நாளை முதல் மார்ச் 31 வரை மாவட்ட எல்லைகள் மூட முதல்வர் பழனிசாமி உத்தரவு
× RELATED அரசுக்கு எதிராக போராடியவர் எனக்கூறி தேனி பெண் போலீஸ் அதிரடி டிஸ்மிஸ்