×

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அத்தியாவசிய கடைகளை தவிர பிற கடைகளை மூட கலெக்டர் பா.பொன்னையா உத்தரவு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் அத்தியாவசிய கடைகளை தவிர பிற கடைகளை மூட கலெக்டர் பா.பொன்னையா உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் மேலும் பரவுவதை தடுக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டு தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டு உள்ளன. மென்பொருள் நிறுவனங் கள், தங்கள் ஊழியர் களை வீடுகளில் இருந்து வேலை செய்ய அனுமதித்து இருக்கின்றன. கொரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியாக பிரதமர் மோடி விடுத்த அழைப்பை ஏற்று, நேற்று நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கு வெற்றிகரமாக நடைபெற்றது. நாடு முழுவதும் வருகிற 31-ம் தேதி வரை பயணிகள் ரெயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் அண்டை மாநில எல்லைகள் ‘சீல்’ வைக்கப்பட்டு, அந்த மாநிலங்களுக்கு பஸ் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு இருக்கிறது. சென்னையில் மெட்ரோ ரெயில் சேவையும் நிறுத்தப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் வகையில் தமிழகத்தில் உள்ள 3 மாவட்டங்கள் உள்பட இந்தியா முழுவதும் 80 மாவட்டங்களை தனிமைப் படுத்தி வைக்குமாறு சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுக்கு மத்திய அரசு ஆலோசனை வழங்கி இருக்கிறது. தனிமைப்படுத்தப்பட வேண்டிய  மாவட்டங்களின் பட்டியலில் தமிழகத்தில் உள்ள சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய 3 மாவட்டங்கள் இடம்பெற்றுள்ளன. இந்தநிலையில் ஊரடங்கை கடுமையாக்க அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. மேலும்  ஊரடங்கை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மத்திய அரசு அறிவுறுத்தலின் பேரில்,  கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் அத்தியாவசிய கடைகளை தவிர பிற கடைகளை மூட  காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா உத்தரவு பிறப்பித்துள்ளார். மறு உத்தரவு பிறப்பிக்கும் வரையில் இந்த உத்தரவு அமலில் இருக்கும் என கூறப்படுகிறது. வெளிமாவட்டத்தில் இருந்து காஞ்சிபுரம் வரும் வாகனங்களுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அதிகம் கூட வேண்டாம் என்று போலீசார் தரப்பில் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்து வருகிறார்கள். சுகாதாரத்துறை சார்பில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.


Tags : Ponniah ,closure ,shops ,Kanchipuram ,Kanchipuram district , Collector Ponniah,orders,closure,essential shops,Kanchipuram district
× RELATED ஆந்திராவில் தேர்தலை முன்னிட்டு 17 டாஸ்மாக் மது கடைகள் மூடல்