×

வீட்டில் இருந்தே வேலை அறிவிப்பால் இன்டர்நெட்டுக்கு படு கிராக்கி: பயன்பாடு கிடுகிடு உயர்வு

புதுடெல்லி: கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் நடவடிக்கையாக, வீட்டில் இருந்தே ஊழியர்கள் பணிபுரியும் திட்டத்தை  பல்வேறு நிறுவனங்கள் செயல்படுத்த துவக்கியுள்ளன. இதனால், இணைய பயன்பாடு அதிகமாகி வருகிறது.  இதுகுறித்து மொபைல் சேவை நிறுவனங்கள் சங்கத்தின் இயக்குநர் ஜெனரல் ராஜன் மேத்யூஸ் கூறுகையில், ‘‘இந்த சங்கத்தில் உள்ள தொலைத்தொடர்பு நிறுவனங்கள், இணைய பயன்பாடு தொடர்பான புள்ளிவிவரங்களை அனுப்பியுள்ளன. இதன்படி, இணைய பயன்பாடு சராசரியாக 10 சதவீதம் அதிகரித்துள்ளது என தெரியவந்துள்ளது. அதேநேரத்தில், பயன்பாடு அதிகரித்ததால் இணைய சேவையில் பாதிப்பு ஏற்படாது எனவும் அவர்கள் கூறியுள்ளனர். இணைய சேவை வழங்கும் நிறுவனங்கள், எந்த பிரச்னையும் ஏற்படாத அளவுக்கு நெட்வொர்க் அமைத்து செயல்படுத்து வருகின்றன. தற்போது இந்த நெட்வொர்க்கில் மொத்த கொள்திறனில் 65 முதல் 70 சதவீதம்தான் பயன்பாட்டில் உள்ளது. எனவே, பயன்பாடு மேலும் அதிகரித்தாலும் எளிதாக சமாளித்து விடலாம்’’ என்றார்.

 இருப்பினும், முக்கிய நிறுவனங்கள் பல மூடப்பட்டு விட்டதால், அலுவலகத்தில் உள்ள இணைய பயன்பாடு குறைந்து விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஏனெனில் இத்தகைய பெரிய நிறுவனங்கள், ஐடி நிறுவனங்கள் பலவற்றில் மொத்த நெட்வொர்க் திறனில் 95 சதவீதம் வரை பயன்படுத்தப்பட்டு விடுகிறது. இவற்றில் பெரும்பாலானவை பிராண்ட்பேண்ட் இணைப்பு உள்ளவை என கூறப்படுகிறது. ஆனால், மொபைல் இணைய சேவையில்தான் பயன்பாடு திடீரென அதிகரித்துள்ளது. இதற்கேற்ப சில நிறுவனங்கள் புதிய பேக்கேஜ் கட்டணங்களை அறிவித்துள்ளன. இதுமட்டுமின்றி, ஸ்மார்ட் டிவியில் இணைய சேவை மூலம் வீடியோக்கள் பார்ப்பதும் உயர்ந்துள்ளது என நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.டாங்கிள் விற்பனை விறுவிறுமொபைல் மூலமான இணைய பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில், 4ஜி டாங்கிள்கள் தேவை வெகுவாகவே குறைந்திருந்தது. தற்போது வீட்டில் இருந்தே வேலை செய்வோர் பலர் தங்கள் வீட்டுக்கு என தனியாக பிராட்பேண்ட் சேவையை வைத்திருப்பதில்லை. எனவே, தற்போதைய அவசியம் கருதி தங்கள் லேப்டாப் மற்றும் கம்ப்யூட்டர்களுக்கு இணைய இணைப்பு வழங்க 4ஜி டாங்கிள்களை நாடியுள்ளனர். இதனால், பெரும்பாலான கடைகளில் 4ஜி டாங்கிள்கள் விற்பனை 2 வாரங்களிலேயே இரட்டிப்பாக உயர்ந்துள்ளது. பல இடங்கிளில் ஸ்டாக்குகள் விற்று தீர்ந்து விட்டதாக கடைக்காரர்கள் தரப்பில் கூறப்படுகிறது.


Tags : job announcement ,home , Get , job announcement , home
× RELATED வாக்களிக்க வந்தபோது ‘இந்திய நாடு என் வீடு’- பாடலை பாடினார் நடிகர் வடிவேலு