×

எல்லா தொழில்களும் தமிழகத்தில் முடங்கி விட்டன: ஜெகதீசன், தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க தலைவர்

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 10 பேருக்கு மேல் வேலை பார்க்கும் சிறிய நிறுவனங்களை மூட தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. அதனால் தற்போது சிறு,குறு மட்டுமின்றி பெரிய நிறுவனங்களிலும் உற்பத்தி அனைத்தும் குறைக்கப்பட்டுள்ளது. தற்போது தமிழகத்தில் இருந்து வெளி மாநிலத்துக்கு போக முடியாது. வெளி மாநிலத்தில் இருந்து தமிழகத்துக்கு வர முடியாது. அதே போன்று வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியோ, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியோ செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.   தமிழகத்தில் ரூ.10 கோடிக்கு மேல் வர்த்தகம் செய்யும் நிறுவனங்கள் இப்போது மூடப்பட்டு வருகின்றன. இது தேசிய பேரிடர் என்பதால் நாமும் மத்திய அரசுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும். அவர்களின் கட்டுபாடுகளை பின்பற்றி தான் ஆக வேண்டும். இதை செய்யவில்லை என்றால் கொத்து, கொத்தாக கொரோனா வைரஸ் பரவி விட வாய்ப்புள்ளது.

 இதில், தொழிற்சாலைகளுக்கு என்ன பிரச்னை என்றால், போன மாதம் 20ம் தேதி ஜிஎஸ்டி வரி கட்ட வேண்டியது, இந்த மாதம் 20ம் தேதி கட்ட வேண்டிய ஜிஎஸ்டி வரியை 3 மாதம் தள்ளி வைக்க வேண்டும். நமது மாநிலத்தில் தான் சிறு, குறு, பெரு தொழில் நிறுவனங்கள் அதிகமாக உள்ளது. அதனால், தான் நமது மாநிலத்தில் பாதிப்பு அதிகமாக உள்ளது. எல்லா துறை தொழில் நிறுவனங்களும் முடங்கி விட்டன.இதே ஒரு கார்ப்பரேட் நிறுவனங்கள் என்று பார்த்தால், அந்த நிறுவனங்களுக்கு ஒரு பிரச்னையும் இருக்காது. நாங்கள் ஜிஎஸ்டி வரி கட்டுவதை தள்ளி வைக்க வேண்டும் என்று கேட்டு இருக்கிறோம். அதே போன்று பெரும்பாலான தொழில் நிறுவனங்களில் வங்கிகளில் நீண்ட மற்றும் குறைந்த கால கடன் பெற்று இருப்பார்கள். ஒரு மாதத்தில் வங்கி கடன் கட்டாவிட்டாலும் அவர்களுக்கு பிரச்னை தான். 3 மாதங்கள் கட்டா விட்டால் செயல்படாத வங்கி கணக்கில் கொண்டு போய் விடுகின்றனர். அதன் பிறகு அந்த வங்கி கணக்கை நாம் தொடர முடியாத நிலையில் இருக்கும்.

இந்த கொரோனா தாக்கம் எப்போது குறையும் என்பது தெரியவில்லை. இந்த பிரச்சனை முடிவுக்கு வந்த 3 முதல் 6 மாதங்களுக்கு பிறகே கடன் கட்டும் அளவுக்கு தள்ளி வைக்க வேண்டும். தற்போதைய நிலையில் கொரோனா பாதிப்பு ஜூன் மாதம் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. அரசு சார்பில் வைக்கும் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு தருகிறோம். அதே நேரத்தில் தற்போது தொழில் முடங்கியுள்ள நிலையில் அரசும் எங்களது கோரிக்கையையும் செவி சாய்க்க வேண்டும். ஓட்டல் போன்ற சேவை செய்யும் நிறுவனங்கள் மட்டுமே செயல்படுகிறது. ஆனாலும் அந்த ஓட்டல்கள் கூட பொதுமக்கள் வெளியில் வராததால் பெரிய அளவில் வருவாய் கிடைக்கவில்லை. தற்போது சூப்பர் மார்க்கெட், வணிக வளாகங்களும் மூடப்பட்டு விட்டன. இருப்பினும் அவற்றில் பணிபரியும் அனைத்து ஊழியர்களுக்கு ஊதியம் பிடித்தம் செய்து தராமல் முழு ஊதியம் தர வேண்டும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

அதற்கேற்றாற் போல் பாதிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு வரி விலக்கோ அல்லது வரிச்சலுகையோ அளிக்க வேண்டும். அப்போது தான் அந்த நிறுவனங்களும் இழப்பில் இருந்து மீள முடியும். இருப்பினும் தற்போதைய பிரச்னை எத்தனை நாட்கள் நீடிக்கும் என்று தெரியவில்லை. நான்கு நாட்கள் இருந்தால் பரவாயில்லை. மார்ச் இறுதியில் முடிந்து விடுமா அல்லது அதற்கு பிறகும் நீடிக்குமா என்று தெரியவில்லை. அதை மனதில் வைத்து கொண்டு தொழில் நிறுவனங்களுக்கு தேவையான உதவிகளை மத்திய, மாநில அரசுகள் செய்து தர வேண்டும்.


Tags : Jegadeesan ,Tamil Nadu ,Tamil Nadu Industrial Trade Union All , All industries , crippled , Tamil Nadu,Jegadeesan
× RELATED மோடியை மிஞ்சும் வகையில் வியூகம்;...