×

கேரளாவில் மேலும் 15 பேருக்கு பாதிப்பு: காசர்கோடு மாவட்டம் துண்டிப்பு

திருவனந்தபுரம்: கேரளாவில் நேற்று மேலும் 15 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கடந்த 20ம் தேதி 12 பேருக்கும், 21ம் தேதி 12 பேருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. நேற்று மேலும் 15 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து கேரளாவில் கொரோனா வைரஸால்  பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 67 ஆக உயர்ந்துள்ளது. காசர்கோடு மாவட்டத்தில் நோய் வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து இந்த மாவட்டத்தில் பொது போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் கூட்டமாக நிற்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதை தவிர கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள பத்தனம் திட்டா, எர்ணாகுளம், கோட்டயம், திருவனந்தபுரம், மலப்புரம், கண்ணூர், இடுக்கி மற்றும் பாலக்காடு ஆகிய 8 மாவட்டங்களிலும் கடும் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே மக்கள் ஊரடங்கு காரணமாக நேற்று கேரளாவில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. பஸ் உள்பட எந்த வாகனமும் ஓடவில்லை. மெட்ரோ ரயிலும் இயக்கப்பட வில்லை. இதற்கிடையே, மத்திய அரசு பரிந்துரையின்படி பத்தனம்திட்டா, காசர்கோடு, எர்ணாகுளம், கோட்டயம், திருவனந்தபுரம், மலப்புரம், கண்ணூர் ஆகிய 7 மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம்  பிறப்பிக்கப்படும் என்று தகவல் வெளியானது. ஆனால் இது தொடர்பாக இன்று முடிவெடுக்கப்படும் என்று கேரள முதல்வர் பினராய் விஜயன் குறிப்பிட்டுள்ளார்.

* கைதிகள் ‘லொக்கு’ லொல்லு
கொரோனா வைரஸ் பீதியால் இருமல் இருக்கும் பல கைதிகள் ஜாமீன் மற்றும் பரோலில் விடப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் திருவனந்தபுரம்,  எர்ணாகுளம், கோழிக்கோடு, கண்ணூர் சிறைகளில் இருமும் கைதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்தது. இது சிறை அதிகாரிகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து நடத்திய விசாரணையில், இருமினால் கொரோனா வைரஸ் அறிகுறி என்று நினைத்து தங்களுக்கு ஜாமீன் அல்லது பரோல் கிடைக்கும் என்று பொய்யான நாடகத்தை கைதிகள் அரங்கேற்றிய குட்டு வெளிப்பட்டது. ஆனாலும் இருமும் கைதிகளுக்கு வேறு வழியில்லாமல் மருத்துவ பரிசோதனை நடத்த வேண்டிய நிலை உள்ளது. இது ஒருபுறம் இருக்க, கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைதிகளை விசாரணைக்காக நீதிமன்றங்களுக்கு கொண்டு செல்வது தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.

Tags : district ,Kasaragod , Kerala, 15 people affected, Kasargod district, cut off
× RELATED பூட்டிய வீட்டில் கட்டுக்கட்டாக...