×

மும்பையில் புறநகர் ரயில் சேவைகள் ரத்து

மகாராஷ்டிராவில், கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதாலும், லட்சக்கணக்கணக்கான மக்கள் அன்றாடம் பயணம் செய்யும் புறநகர் ரயில்கள் மூலம் கொரோனா வைரசின் பரவல் மேலும் கணிசமாக அதிகரிக்கக் கூடும் என்று கருதப்பட்டதாலும் புறநகர் ரயில் சேவைகளை ரத்து செய்வது குறித்து மாநில அரசு தீவிரமாக பரிசீலித்து வந்தது.

கொரோனா வைரஸ் பரவலின் தீவிரத்தை உணர்ந்த மத்திய அரசும், மும்பையில் புறநகர் ரயில் சேவைகளை ரத்து செய்ய வேண்டும் என்று மகாராஷ்டிரா அரசை வலியுறுத்தி வந்தது. இந்த நிலையில், கொரோனாவுக்கு மும்பையில் மேலும் ஒருவர் பலியானதாலும், மும்பையில் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 18 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாலும், வேறு வழியில்லாத நிலையில் மும்பை பெருநகரின் உயிர்நாடியாக கருதப்படும் புறநகர் ரயில் சேவைகளை ரத்து செய்ய அரசு அதிரடியாக முடிவு செய்துள்ளது. கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியதில் இருந்தே பொதுமக்கள் தேவையற்ற பயணத்தை தவிர்க்குமாறு முதல்வர் உத்தவ் தாக்கரேவலியுறுத்தி வந்தார். ஆனால், புறநகர் ரயில்களில் கூட்டம் குறையவில்லை. இதனால் இப்போது புறநகர் ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மும்பை பெருநகரின் உயிர்மூச்சாக புறநகர் ரயில் சேவைகள் விளங்கி வருகின்றன. மத்திய ரயில்வே வழித்தடத்தில் இயக்கப்படும் புறநககர் ரயில்களில் தினசரி சராசரியாக 45 லட்சம் பேரும், மேற்கு ரயில்வே வழித்தடத்தில் இயக்கப்படும் புறநகர் ரயில்களில் தினசரி சராசரியாக 35 லட்சம் பேரும் பயணம் செய்கிறார்கள். இவர்களால்தான் மும்பை நகரமே இயக்கத்தில் உள்ளது. இந்த நிலையில், புறநகர் ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் மும்பை மாநகரம் மட்டுமல்லாது மும்பை பெருநகர பிராந்தியத்துக்குட்பட்ட தானே, பாலர், ராய்கட் மாவட்டங்களில் உள்ள நகரங்களும் ஒட்டுமொத்தமாக முடங்கிப் போகும் நிலை உருவாகியுள்ளது.

மேலும் ஒருவர் பலி

மகாராஷ்டிராவில், மும்பையில் மேலும் 6 பேருக்கும் புனே மாவட்டத்தில் மேலும் 4 பேருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு நோயாளிகளின் எண்ணிக்கை 74 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பால் நேற்று முன்தினம் கிர்காமில் உள்ள எச்.என். ரிலையன்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த 63 வயது முதியவர் நேற்று மரணமடைந்தார். இதற்கு முன்பு கடந்த 17ம் தேதி 65 வயது முதியவர் ஒருவர் பலியாகியிருந்தார். இதனால் வைரசுக்கு பலியானோரின் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது.

Tags : Mumbai ,Corona , Corona
× RELATED ஐபிஎல் தொடர் சட்டவிரோதமாக...