ரயில்கள் இயக்காததை கண்டித்து சென்ட்ரல் ரயில் நிலையத்தை வடமாநில பயணிகள் முற்றுகை

சென்னை: அசாம், பீகார், மேற்குவங்கம், உத்தரபிரதேசம்,டெல்லி ஆகிய பகுதிகளுக்கு ரயில்களை இயக்கக்கோரி வடமாநில தொழிலாளர்கள் மற்றும் பயணிகள் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை முற்றுகையிட்டனர். நாடு முழுவதும் சுய ஊரடங்கு நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதனால் நேற்று அதிகாைலயில் இருந்து இரவு 9 மணி வரை அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டது. இதனால் சென்னை உள்பட பல்வேறு ரயில் நிலையங்களில் வெளிமாநிலத்துக்கு செல்பவர்கள் குவிந்தனர். ஆனால் சென்னை சென்ட்ரலில் இருந்து டெல்லி, ஹவுரா, கவுகாத்தி, விஜயவாடா, சண்டிகர், அசாம் உள்பட பல பகுதிகளுக்கும் இயக்கப்படும் ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டது.

இதனால் இந்த ரயில்களில் செல்ல வந்தவர்கள் சென்னை சென்ட்ரலிலேயே தங்கிவிட்டனர். மேலும் நேற்று கடைகளும் மூடப்பட்டதாலும் பயணிகள் ரயில் நிலைய பிளாட்பாரத்தில் அனுமதிக்கப்படாத காரணத்தாலும் பயணிகள் அவதிப்பட்டனர். இந்நிலையில், மெயில், இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ், பாசஞ்சர், மின்சார ரயில்கள் மார்ச் 31ம் தேதி வரை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் ரயில்கள் மூலம் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க முடியும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. ஏற்கெனவே ரயில்களில் ரிசர்வேஷன் செய்தவர்களின் பணம் திருப்பி அளிக்கப்படும் என ரயில்வே அறிவித்தது.

இதை கேள்விப்பட்ட சென்ட்ரல் ரயில்நிலையத்தில் வடமாநிலங்களுக்கு செல்வதற்காக காத்திருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அவர்கள் திடீரென்று சென்ட்ரல் ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு எங்களிடம் பணம் எதுவும் இல்லை, சாப்பிடுவதற்கு கடைகள் எதுவும் திறக்கவில்லை, எங்கே தங்குவது, எனவே எங்கள் மாநிலத்திற்கு ரயில்களை இயக்க வேண்டும் என்று கூறினர். பின்னர் அவர்களிடம் ரயில்வே அதிகாரிகள் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அவர்கள் அனைவரையும் பேருந்தில் ஏற்றி அருகில் உள்ள மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தால் சென்ட்ரல் ரயில்நிலையம் முன்பு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories:

>