கேளம்பாக்கம் - கோவளம் சாலை முகத்துவார பகுதியில் கொட்டப்படும் குப்பை கழிவால் சுற்றுச்சூழல் பாதிப்பு: விபத்து ஏற்படும் அபாயம்

சென்னை: கேளம்பாக்கம் - கோவளம் சாலையில் முகத்துவாரத்தில் கொட்டப்படும் குப்பையால் சுற்றுச்சூழல் பாதிப்பதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.

புறநகர்ப் பகுதியான கேளம்பாக்கத்தில் சுமார் 25000 பேர் வசித்து வருகின்றனர். இங்குள்ள வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள், கடைகள், ஓட்டல்களில் இருந்து ஊராட்சி பணியாளர்கள் மூலம் கழிவுகள், குப்பைகள் அகற்றப்படுகின்றன.

இவ்வாறு அகற்றப்படும் கழிவுகள் கோவளம் சாலையில் கொட்டப்படுகின்றன. இவற்றில் நாய்கள், பன்றிகள் தங்களின் உணவுகளைத் தேடி இந்த குப்பைகளை கிளறி விடுகின்றன. இதனால் அந்த பகுதி முழுவதுமே துர்நாற்றம் வீசுகிறது. மேலும் இவற்றில் கொசு உற்பத்தியாகி ஜோதி நகர் உள்ளிட்ட குடியிருப்புகளில் தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. காற்று வீசும்போது கழிவுப் பொருட்களும், குப்பைகளும் பறந்து சென்று குடியிருப்பு பகுதிகளில் விழுகின்றன.

அதுமட்டுமின்றி கேளம்பாக்கத்தில் இருந்து கோவளம் செல்லும் சாலையில் முகத்துவாரம் உள்ளது. கேளம்பாக்கம், கோவளம் ஊராட்சிகளில் இருந்தும் மற்றும் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஓட்டல்களில் இருந்தும் கொண்டு வரப்படும் உணவுக்கழிவுகள், பிளாஸ்டிக் கழிவுகள் போன்றவை முகத்துவாரத்தை ஒட்டி கொட்டப்படுகின்றன.

முகத்துவாரத்திற்கு வரும் வெளிநாட்டு பறவைகள் இந்த கழிவுகளில் உள்ள உணவை சாப்பிடுவதற்காக இந்த குப்பைகளை கிளறுகின்றன. சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளின் மீது இந்த குப்பைகள் விழுவதால் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. இவை தவிர இந்த குப்பைக் கூளங்களில் இருந்து பிளாஸ்டிக் கழிவுகள் பறந்து மரங்களில் தொங்கியபடி சுற்றுச்சூழலை கெடுக்கின்றன.

கேளம்பாக்கம் மற்றும் கோவளம் ஊராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் முறையாக செயல்படுத்தப்படவில்லை. மேலும் வீடுகளில் இருந்து கழிவுகள் ஊராட்சி மன்ற பணியாளர்கள் மூலம் பெற்றுச் செல்லப்படுவது இல்லை. ஆகவே கோவளம் மற்றும் கேளம்பாக்கம் ஊராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்தி சாலைகளில் குப்பைகள் கொட்டப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டுமெனவும், முகத்துவாரப் பகுதியில் கழிவுகளை கொட்டும் ஓட்டல்கள் மீது நடவடிக்கை எடுத்து அபராதம் விதிக்க வேண்டுமெனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>