×

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் அக்கா மகளை அடித்து கொன்று வீட்டிலேயே புதைத்து விட்டேன்: இரட்டை கொலை வழக்கில் கைதானவர் போலீஸ் காவலில் பரபரப்பு வாக்குமூலம்

வேளச்சேரி: கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் அக்கா மகளை அடித்து கொன்று வீட்டிலேயே புதைத்து விட்டேன், என இரட்டை கொலை வழக்கில் கைதானவர் போலீஸ் காவலில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். மேடவாக்கம் அடுத்த சித்தாலப்பாக்கத்தை சேர்ந்த லிப்ட் ஆபரேட்டர் லிட்டில் ஜான் (எ) ஹென்றி (38) என்பவர், கடந்த 7ம் தேதி சித்தாலப்பாக்கம் ஏரியில் மர்மமான முறையில் சடலமாக மிதந்தார். அவர் அணிந்திருந்த ஒரு சவரன் செயின் மாயமாகி இருந்ததால், அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

அதன்பேரில், பள்ளிக்கரணை போலீசார் ஏரி அருகே உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர். அப்போது சம்பவத்தன்று ஆட்டோ ஒன்று அங்கு வந்து சென்றது தெரியவந்தது. அதன் பதிவு எண்ணை வைத்து ஆய்வு செய்ததில், மேடவாக்கம், ராமைய்யா நகர், நேரு தெருவை சேர்ந்த மக்கள் நீதி மய்யம் கட்சியின் சோழிங்கநல்லூர் பகுதி செயலாளர் சேவியர் அருள் (45) என்பவருக்கு சொந்தமானது என தெரியவந்தது.

அவரை பிடித்து விசாரித்தபோது,‘‘எனக்கும் ஹென்றிக்கும் மது அருந்தும்போது பழக்கம் ஏற்பட்டது. சம்பவத்தன்று அவர் கழுத்தில் இருந்த செயினை திருடுவதற்காக நைசாக பேசி சித்தாலப்பாக்கம் ஏரிக்கு அழைத்து சென்றேன். அங்கு, எனது மகன் மைக்கேல் விஜய் (19), எனது நண்பர் பெரும்பாக்கம் வனத்துறை குடியிருப்பு 10வது தெருவை சேர்ந்த அமல்ராஜ் (32) ஆகியோருடன் சேர்ந்து, ஹென்றிக்கு அதிக மது கொடுத்தேன். போதை தலைக்கேறியதும் செயினை பறித்துக்கொண்டு அவரை ஏரியில் தள்ளி, தண்ணீரில் மூழ்கடித்து சாகடித்தோம்,’’ என கூறியுள்ளார்.

மேலும் விசாரணையில், ‘‘மேடவாக்கத்தில் உள்ள பிரபல துணிக்கடையில் பணியாற்றி வந்த திருவண்ணாமலை மாவட்டம், சங்கத்தை சேர்ந்த சபானா (23) என்ற பெண்ணை தனது மகன் காதலித்ததான். இதில், அந்த பெண் கர்ப்பமானதால், என்னிடம் வந்து உங்களது மகனை திருமணம் செய்து வைக்க வேண்டும், என தொல்லை செய்தார். இதில் எனக்கு விருப்பம் இல்லை.

அதனால் அந்தப் பெண்ணையும் நைசாக பேசி சித்தாலப்பாக்கம் ஏரி பகுதிக்கு சென்றேன். அங்கு, எனது கூட்டாளிகளுடன் சேர்ந்து அந்த பெண்ணை தாக்கி, கைகளைக் கட்டி ஏரியில் வீசி கொன்றேன்,’’எனவும் தெரிவித்துள்ளார். இதையடுத்து போலீசார் சேவியர் அருள், அவரது மகன் மைக்கேல் விஜய் மற்றும் அவரது நண்பர் நண்பர் அமல்ராஜ் ஆகிய 3 பேரையும் கடந்த 9ம் தேதி கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

அடுத்தடுத்து 2 கொலைகளை செய்துவிட்டு சர்வ சாதாரணமாக சுற்றித்திரிந்த சேவியர் அருள் வேறு ஏதாவது கொலை வழக்கில் தொடர்புள்ளாரா என அவரை நீதிமன்ற காவலில் விசாரிக்க போலீசார் ஆலந்தூர் நீதிமன்றத்தில் மனு செய்தனர். அப்போது, 3 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க மாஜிஸ்திரேட்டு அனுமதி வழங்கினார். இதையடுத்து சேவியர் அருளை போலீசார் விசாரித்தபோது மேலும் ஒரு திடுக்கிடும் கொலை பற்றி தெரிவித்துள்ளார்.

அதில், திருப்பூரில் உள்ள தனது அக்கா சகாயமேரி (50), கணவனை பிரிந்து தனியாக வசித்து வருகிறார். இவரது மகள் சையதலி பாத்திமா (28) என்பவரும் கணவனை பிரிந்து தனது தாயுடன் வசித்து வந்தார். கடந்த 2007ம் ஆண்டு ஜூலை மாதம், சகாயமேரிக்கு பலருடன் கள்ளக்காதல் இருப்பது மகள் சையதலி பாத்திமாவுக்கு தெரியவந்தது. இதனால், தாயை கண்டித்ததால், அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

இதுபற்றி அறிந்த நான், நேரில் சென்று சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டபோது, மீண்டும் தகராறு ஏற்பட்டது. நான் அடித்ததில் சையதலி பாத்திமா மயங்கி விழுந்து இறந்தாள். பின்னர், யாருக்கும் தெரியாமல் வீட்டிற்குள்ளேயே குழி தோண்டி சடலத்தை அடக்கம் செய்துவிட்டு வந்துவிட்டதாக தெரிவித்தார்.
இதையடுத்து பள்ளிக்கரணை இன்ஸ்பெக்டர் அழகு தலைமையில் போலீசார் இவரை திருப்பூர் அழைத்துசென்றனர். அங்கு சையதலி பாத்திமா புதைக்கப்பட்ட இடத்தை காட்டினார். இதுபற்றி திருப்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசார் இதுபற்றி சகாயமேரியிடம் விசாரித்து வருகின்றனர். பின்னர், சேவியர் அருளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சென்னைக்கு வந்துவிட்டதாகவும் பள்ளிக்கரணை போலீசார் தெரிவித்தனர்.

Tags : sister ,house , Counterfeiting, double murder Police custody, affidavit
× RELATED ஏட்டு வீட்டில் திருடிய 2 பேரை காவலில் எடுத்து விசாரணை