×

ஊரடங்கின் போது வேலைக்கு அழைத்ததால் தனியார் தொழிற்சாலையில் அதிகாரிகள்-ஊழியர்கள் மோதல்: மணலியில் பரபரப்பு

திருவொற்றியூர்: ஊரடங்கின் போது வேலைக்கு வரும்படி கட்டாயப்படுத்தியதால், தனியார் தொழிற்சாலை அதிகாரிகளுடன் ஊழியர்கள் மோதலில் ஈடுபட்ட சம்பவம் திருவொற்றியூரில் பரபரப்பை ஏற்படுத்தியது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நேற்று ஒருநாள் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை அரசு ஊரடங்கு உத்தரவை அறிவித்தது. இதனால், மக்கள் யாரும் வெளியே வராமல் வீட்டில் முடங்கினர். ஓட்டல்கள், சாலையோர கடைகளும் முற்றிலுமாக மூடப்பட்டதால், திருவொற்றியூர், மணலி, மாதவரம் போன்ற பகுதிகளில் சாலை முழுவதும் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.

அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் மூடப்பட்டன. மணலி சிபிசிஎல் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனம், எம்எப்எல் உரத் தொழிற்சாலை போன்ற மத்திய அரசு நிறுவனங்கள் உற்பத்தி பிரிவை மட்டும் இயக்கியது. இதில் பணியாற்றும் ஊழியர்கள் வழக்கம் போல் நேற்று பணிக்கு வந்தனர். இந்நிலையில், மணலியில் உள்ள நைலான் உற்பத்தி செய்யும் தனியார் தொழிற்சாலையில் நேற்று ஊழியர்கள் வழக்கம்போல் பணிக்கு வரவழைக்கப்பட்டிருந்தனர்.

முதல் ஷிப்ட்டில் பல தொழிலாளர்கள் நிறுவனத்தில் உள்ளே வந்து பணிபுரிந்த நிலையில், 2வது ஷிப்டுக்கு  பகல் 2 மணிக்கு வந்த தொழிலாளர்கள், ‘‘ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும்போது, அரசு உத்தரவை மீறி ஏன் வேலைக்கு வரும்படி கட்டாயப்படுத்துகிறீர்கள்,’’என நிர்வாகத்திடம் வாக்குவாத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த அதிகாரிகள்,‘‘நிறுவனத்தில் உள்ள பாலி என்ற பிளான்டை நிறுத்தினால் மீண்டும் அதை இயக்குவதற்கு 36 மணி நேரம் ஆகும். இதனால், பல லட்சம் ரூபாய் செலவாகும்’’என சமாதானம் செய்தனர். ஆனால், இதை ஏற்காத தொழிலாளர்கள் அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், 2வது ஷிப்ட்க்கு வந்த தொழிலாளர்கள் அனைவரும் திரும்பிச் சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


Tags : clash ,Manali ,factory ,curfew ,Clash In Private Factory , Curfew, work, private factory, officers-staff, conflict
× RELATED மணலி சாலையில் குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்