×

சுய ஊரடங்கு நாளில் உற்சாகம்: முக்கூடல் தாமிரபரணி ஆற்றில் கூடியவர்களுக்கு அபராதம்

பாப்பாக்குடி: கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் சுய ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில் முக்கூடல் தாமிரபரணி ஆற்றில் குளித்தவர்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர். நெல்லை மாவட்டம் முக்கூடல் காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் முன்னெச்சரிக்கை பணிகளை சப்.இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையில் போலீசார் குழு அமைத்து கண்காணித்து வருகின்றனர். மக்கள் அதிகம் கூடும் இடங்களை  கண்காணித்து மக்களை கூட விடாமலும்  எந்நேரமும் பக்தர்கள் கூட்டம் அதிகம் காணப்படும் முக்கூடல் முத்துமாலை அம்மன் கோயில், வாரச்சந்தை, முக்கிய பஜார் பகுதிகளில் போலீசார்  ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதுமட்டுமின்றி திருமணம் போன்ற இல்ல விழாக்களிலும் கூட்டம் அதிகமாக கூட கூடாது என கட்டுப்பாடு விதித்து கண்காணித்து வந்தனர். மக்கள் சுய ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நேற்று முக்கூடல் தாமிரபரணி ஆற்றங்கரை பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது நூற்றுக்கும் மேற்பட்டோர் கூட்டமாக உற்சாகமாக குளித்துக் கொண்டும், கரையில் அமர்ந்து பேசிக்கொண்டுமிருந்தனர். உடனடியாக அவர்களை அழைத்து குடும்பமாக வந்தவர்களை எச்சரித்தும், முப்பதுக்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் வந்தவர்களுக்கு தலா ரூ.100 அபராதமும் விதித்தும் அனுப்பி வைத்தனர். போலீசார் அறிவுறுத்தலை அடுத்து முக்கூடல் முத்துமாலை அம்மன் கோயிலில் பக்தர்கள் அனுமதிக்கப்படாமல் பூஜைகள் மட்டுமே நடைபெற்று வருகிறது.

Tags : Trikuttha Thamparani River ,Thamirabarani , Thamirabarani
× RELATED சாலை விதிமீறலுக்கு ஆன்லைனில் அபராதம்...