×

மக்கள் ஊரடங்கு காரணமாக 6 மணிக்கே மணமகளுக்கு தாலி கட்டிய மணமகன்கள்: குறைந்த நபர்களுடன் நடந்த 30 விழாக்கள்

திருச்சி: மக்கள் ஊரடங்கு காரணமாக திருச்சி, ஒரத்தநாட்டில் இன்று குறைந்த எண்ணிக்கையிலான உறவினர்கள் முன்னிலையில் காலை 6 மணிக்கு திருமணம் உட்பட 30 விழாக்கள் நடந்து முடிந்து உள்ளது. திருச்சியில் ஒரு மணமக்களுக்கு இன்று காலை 10 மணி முகூர்த்தத்தில் திருமணம் நடத்த பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமண பத்திரிகை அச்சடிக்கப்பட்டு உறவினர்கள், நண்பர்களுக்கு அளித்தனர். இந்நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக இன்று மக்கள் ஊரடங்கு நடைபெறுகிறது. இதனால் திருமணத்தை 6 மணிக்குள் குறைந்த நபர்களுடன் முடித்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. அதன்படி இருவீட்டாரும் இன்று காலை மத்திய பஸ்நிலையம் அருகே திண்டுக்கல் சாலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் கூடினர். திருமணத்தில் இருவீட்டார் சார்பில் 20 பேர் மட்டுமே இருந்தனர்.

10 மணிக்கு முகூர்த்தத்தை மாற்றி 6 மணிக்கே திருமணம் நடந்தது. மணமகன், மணமகள் கழுத்தில் தாலி கட்டினார். மேடையில் நின்ற இருவீட்டார் மட்டுமே மணமக்களை வாழ்த்தினர். 500க்கும் மேற்பட்டோருக்கு பத்திரிகை அளித்த நிலையில் இருவீட்டார் மட்டுமே பங்கேற்றனர். இதுபற்றி மணமக்களின் உறவினர்கள் கூறுகையில், ‘‘கொரோனா வைரஸ் காரணமாக திருமணத்தை 6 மணிக்கே முடித்துவிட்டோம். உடனே வீட்டுக்கு சென்றுவிடுவோம். நாட்டு நலனுக்கு இதுபோல் திருமணம் நடந்தது மகிழ்ச்சிதான்’’ என்றனர். தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாலுகாவில் பாப்பாநாடு, திருவோணம் உள்ளிட்ட பகுதிகளில் திருமண நிகழ்ச்சிகள் மற்றும் காதுகுத்து வைபவங்கள் என இன்று 29 நிகழ்ச்சிகள் நடைபெற இருந்தது. இந்த நிகழ்ச்சிகளுக்கான அழைப்பிதழ்கள் ஏற்கனவே அச்சடிக்கப்பட்ட உறவினர்கள் நண்பர்களுக்கு வினியோகம் செய்துவிட்டனர்.

மக்கள் ஊரடங்கு, இந்த நிகழ்ச்சிகளை இன்று அதிகாலை 6 மணிக்குள் 10 நபர்களுக்கு குறைவாகவே கலந்துகொண்டு வைபவ நிகழ்ச்சியை முடித்து விடவேண்டும் என்று ஒரத்தநாடு தாசில்தார் அருள்ராஜ் விழா உரிமையாளர்களிடம் உத்தரவிட்டார். இதையடுத்து கிராம நிர்வாக அதிகாரிகளும், வருவாய் ஆய்வாளர்களும் போலீசாருடன் இந்த நிகழ்ச்சி குறித்த கண்காணிப்பில் ஈடுபட்டனர். அதிகாரிகள் அறிவித்தபடி 29 இடங்களிலும் குறைந்த நபர்களுடன் இன்று காலை 6 மணிக்கு விழாக்கள் நடைபெற்றது.

முன்கூட்டியே திருமணம்
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடியை அடுத்த கோலேந்திரம் பகுதியைச் சேர்ந்த முகமதுமைதீன் மகன் ஆரிஷ்கான் என்பவருக்கும், அறந்தாங்கி யாக்கூப் மகள் சகிலாபானு என்பவருக்கும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அறந்தாங்கி எம்.ஆர்.திருமண மஹாலில் திருமணம் நடத்த முடிவு செய்து மணவீட்டார் உறவினர்கள், நண்பர்களுக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டது. மக்கள் ஊரடங்கு காரணமாக நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) இரவு அறந்தாங்கி பெரிய பள்ளிவாசலில் திருமணத்தை நடத்தினர்.

Tags : Dalai ,bride ,ceremonies ,dali ,groomsmen , The people are curfews, dali, groomsmen
× RELATED மணப்பெண் மாயம்