×

கொரோனா வைரஸ் எதிரொலி; மாஸ்க் அணிந்து மணமகளுக்கு தாலிகட்டிய மணமகன்: காஞ்சிபுரத்தில் ருசிகரம்

காஞ்சிபுரம்: சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி நாட்டு மக்களை பீதியடையவைத்துள்ளது. பிரதமர் மோடி வேண்டுகோள்படி கொரோனாவை கட்டுப்படுத்த இன்று காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை பொதுமக்கள் சுய ஊரடங்கு கடைபிடித்து வருகின்றனர். இதனால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அன்னை இந்திராகாந்தி சாலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்கள், உணவகங்கள், ராஜாஜி மார்க்கெட், ஜவஹர்லால் நேரு மார்க்கெட் மூடப்பட்டன. இதனால் காஞ்சிபுரம் நகரமே வெறிச்சோடியது. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்ததால் மாணவர்கள் வீட்டுக்குள் முடங்கினர்.  மாவட்ட விளையாட்டு மைதான நுழை வாயில்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு நடைப்பயிற்சிக்கு வந்தவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.

நெய்வேலியை சேர்ந்த பணி ஓய்வு பெற்ற வட்டாட்சியர் மூர்த்தியின் மகன் எம்.கவுதம் கார்த்திக்கும், காஞ்சிபுரத்தை சேர்ந்த நெசவாளர் திரு வேங்கடத்தின் மகள் தமிழ்ச்செல்விக்கும் காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயிலில் திருமணம் செய்ய கடந்த 4 மாதங்களுக்கு முன்பே நிச்சயம் செய்யப்பட்டிருந்தது. இதனிடையே, சுய ஊரடங்கை முன்னிட்டு கச்சபேஸ்வரர் கோயில் நடை சாத்தப்பட்டு இருந்தது. இதனால் கோயிலில் திருமணத்தை நடத்த முடியாததால் காஞ்சிபுரத்தில் நாராயண பாளையம் தெருவில் உள்ள மணமகள் இல்லத்தில் இன்று திருமணம் நடந்தது. திருமணத்திற்கு வந்திருந்த அனைவருக்கும் கை கழுவும் திரவம் மூலம் கை கழுவிய பின்னரே அனு மதிக்கப்பட்டனர். மணமகள், மணமகன் மற்றும் திருமணத்துக்கு வந்தவர்கள் அனைவரும் மாஸ்க் அணிவிக்க வலியுறுத்தி அணிவித்தனர்.

பின்னர், மணமகளுக்கு மணமகன் தாலி கட்டினார். அப்போது உறவினர்கள் அட்சதை தூவி வாழ்த்தினர். மிகக்குறைவான உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டதால் திருமணம் எளிமையாக நடந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் ருசிகரத்தை ஏற்படுத்தியது.


Tags : Corona ,Bridesmaids ,Bride ,Kanchipuram Corona ,Kanchipuram , Corona, Mask, Bridesmaids for the bride, Kanchipuram
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...