×

நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா பலி எண்ணிக்கை: வரும் 31-ம் தேதி வரை அனைத்து ரயில்களும் ரத்து...இந்திய ரயில்வே அறிவிப்பு

புதுடெல்லி: சீனாவில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளை கடும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளது. கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. கொரோனா தாக்குதலுக்கு நாடு முழுவதும்  324-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இன்று ஒருவர் உயிரிழந்துள்ளார். இதன் மூலம் இந்தியாவில், கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. மனிதரிடம் இருந்து  மனிதனுக்கு பரவும் இந்த வைரசை கட்டுப்படுத்த மத்திய அரசு ஏராளமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

அனைத்து மாநிலங்களிலும், கல்வி நிலையங்கள், சினிமா தியேட்டர்கள், ஷாப்பிங் மால்கள் என பொதுமக்கள் கூடும் இடங்கள் வரும் 31ம் தேதி வரை மூடப்பட்டுள்ளன. ஆனாலும், வைரஸ் பரவல் தீவிரமடைந்து வருகிறது. இதற்கிடையே,  கொரோனாவை கட்டுப்படுத்தவும், அவசரகாலத்திற்கான ஓர் ஒத்திகையாகவும் மார்ச் 22ம் தேதி காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை நாடு முழுவதும் மக்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்பட வேண்டுமென பிரதமர் மோடி கடந்த  வியாழக்கிழமை வேண்டுகோள் விடுத்தார். அதன்படி, நாடு முழுவதும் இன்று மக்கள் ஊரடங்கு உத்தரவை கடைபிடித்து வருகின்றனர். காலை 7 மணிக்கு தொடங்கிய சுய ஊரடங்கு இரவு 9 மணிக்கு நிறைவடைகிறது.

இதற்கிடையே, ரயில் சேவை நேற்று நள்ளிரவு முதல் இன்று இரவு 10 மணி வரை நிறுத்தப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்தது. மெயில், இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில்கள் அதிகாலை 4 மணி முதல் இயக்கப்படாது. அதே சமயம்,  அதிகாலை 4 மணிக்கு முன்பாக பயணத்தை தொடங்கிய ரயில்கள் பாதி வழியில் நிறுத்தப்படாது என்றும் அந்த ரயில்கள் மட்டும் தொடர்ந்து சென்றடையும் இடம் வரை இயக்கப்படும் என்றும் ரயில்வே அமைச்சகம் தெரிவித்தது. மொத்தம்  நாடு முழுவதும் 3,700 ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளன. அதே போல, சென்னை, கொல்கத்தா, டெல்லி உள்ளிட்ட பெருநகரங்களில் புறநகர் ரயில் சேவை கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது. டெல்லி மெட்ரோ ரயில்கள் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், நாடு முழுவதும் வரும் 31-ம் தேதி வரை அனைத்து விரைவு, அதி விரைவு ரயில்கள் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. சரக்கு ரயில்கள் வழக்கம்போல் இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், புறநகர் ரயில் சேவையும் நிறுத்தப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Tags : Corona ,Indian Railways , Increase in Corona casualty per day: All trains canceled till 31st ...
× RELATED முன்பதிவில்லா ரயில் டிக்கெட்டுகளை யுபிஐ மூலம் பெறும் வசதி அறிமுகம்