×

யெஸ் வங்கி நிதி முறைகேடு ஜெட் ஏர்வேஸ் நிறுவனரிடம் அமலாக்கத் துறை விசாரணை:550 கோடி கடன் தொடர்பாக விளக்கம்

மும்பை: அமலாக்கத் துறை விசாரணைக்கு  ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல் நேற்று நேரில் ஆஜரானார். யெஸ்  வங்கியில் 44 பெரும் நிறுவனங்களுக்கு ₹34 ஆயிரம் கோடி வரை அளித்த கடன் திரும்பச்  செலுத்தப்படாமல் வராக் கடனானது. இதனால் செயல்பட முடியாமல் முடங்கிய இந்த வங்கி, கடந்த 5ம் தேதி ரிசர்வ் வங்கியின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ்  கொண்டு வரப்பட்டது. இந்த வங்கியின் நிறுவனத் தலைவர் ராணா கபூர் ₹4,300 கோடி வரை ஊழல் செய்துள்ளதாக அமலாக்கத் துறை விசாரணையில் தெரிய  வந்தது. இதையடுத்து, யெஸ் வங்கியில் இருந்து கடன் பெற்ற  நிறுவனங்களின் தலைவர்களுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பி வருகிறது. இந்த வங்கியிடம் இருந்து ஜெட்  ஏர்வேஸ் நிறுவனம் ₹550 கோடி வரை கடன்  பெற்றுள்ளது. இதனால், இந்நிறுவனத்தின் நிறுவனர் நரேஷ் கோயலுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியது.

ஆனால்,  அன்றைய தினம் தனது உறவினரின் உடல்நிலையை காரணம் காட்டியதால், வேறொரு நாள்  விசாரணைக்கு வர அவருக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இந்நிலையில், கோயல் நேற்று அமலாக்கத் துறை விசாரணைக்கு நேரில் ஆஜரானார். நிதி மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அவரிடம்  வாக்குமூலம் பெறப்பட உள்ளது.  கோயல் மீது ஏற்கனவே அந்நிய செலாவணி மோசடி  தொடர்பாக அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. யெஸ் வங்கியில் கடன் வாங்கி மோசடி செய்தது தொடர்பாக ரிலையன்ஸ் குழுமத் தலைவர் அனில் அம்பானி, காக்ஸ்  அண்ட் கிங்ஸ் நிறுவனத் தலைவர் பீட்டர் கெர்கார் ஆகியோரிடம் அமலாக்கத் துறை  ஏற்கனவே சில தினங்களுக்கு முன் விசாரணை நடத்தியது. 


Tags : Enforcement Investigation ,Founder ,Yes Bank ,Jet Airways , Yes Bank financial abuse, Jet Airways founder, Implementation
× RELATED ரமலான் பண்டிகை கோலாகலம் ; இஸ்லாமியர்கள் சிறப்புத்தொழுகை