×

கொரோனாவை திட்டி தீர்த்த இலை கட்சி தொண்டர்களை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘கோவை கல்வித்துறையில ஒரே ஆட்டம், பாட்டம்னு அதிகாரி ஒருவரின் ஆட்டத்தை தாங்க முடியலையேனு பேசிக்கிறாங்க... உண்மையா...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘கோவை மாவட்ட கல்வித்துறையில் எப்போதும் பெரிய பிரச்னை தான். இதுக்கு தீர்வே இல்லையானு கேட்கும் அளவுக்கு நிலைமை இருக்கு. இங்குள்ள மாவட்ட கல்வி அதிகாரிகள் மீது புகார்கள் அளிக்கப்படுகிறது. இந்த அதிகாரிகள் மீது கொடுக்கப்படும் புகார்கள் எல்லாம் ஜெயமான கண்காணிப்பாளர் ஒருவர் கைக்கு தான் எப்போதும் போகுது. இவர் தான் சிஇஓ. கிட்ட புகார்களை கொண்டு போய் சேர்க்கணும். ஆனால், அதிகாரிகள் மேல வரும் புகார்களை சிஇஓ. கிட்ட கொடுக்காமல் இவரே திறந்து படிச்சு, புகார் கூறப்பட்ட அதிகாரிகிட்ட பேச்சுவார்த்தை நடத்தி தன் பாக்கெட்டை நிரப்பி வருகிறாராம். இதனால், அதிகாரிகள் மீது ஆசிரியர்கள், சங்கத்தினர் சார்பில் அளிக்கப்படும் எந்த புகாரும் முறையா சிஇஓ. கிட்ட போய் சேருவதில்லையாம். சிஇஓ., அலுவலகத்தில் கண்காணிப்பாளர் போடும் ஆட்டத்தை பார்த்து நேர்மையான அதிகாரிகள் எல்லாம் ஆடிப்போய் கிடக்குறாங்க... அதேசமயம் தப்பு செய்வதையே தொழிலாக வைத்திருக்கும் சிலர் கண்காணிப்பாளரை கவனித்துவிட்டு ஆட்டம் போடுறாங்களாம்... கண்காணிப்பாளரும் பணத்தை வாங்கிட்டு ஆட்டம் போடுறார்...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘ தூங்கா நகர இலை கட்சியினர் புலம்பலை பற்றி சொல்லுங்களேன்...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘தூங்காநகர அமைச்சர்களுள் ஒருவர், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு, தனது பேரன், பேத்திகளுக்கு மதுரையில ஒரு கோயிலில் வைத்து முடிஎடுத்து, காது குத்து விழாவை ஆடம்பரமாக நடத்தி அறுசுவை கறிவிருந்து கொடுத்தாராம்... இதில் முக்கிய பிரமுகர்கள் கலந்துங்கிட்டாங்களாம்... அதேபோல், இந்த ஆண்டும் திடீரென்று இல்ல விழா என்ற பெயரில், இன்று பேரனுக்கு முடி எடுத்து, கிடா வெட்டி, மதுரை கள்ளழகர் கோயிலில் நடத்துவதற்கு தடபுடலாக ஏற்பாடு செய்து இருந்தாராம்... 100 ஆடுகள், 1,000 கோழிக்கு ஆர்டர் கொடுத்து இருந்தாராம்... கடசிக்காரர்கள், அதிகாரிகளுக்கெல்லாம் அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததாம்....
இந்த நேரம் பார்த்து, அதே நாளில் கொரோனோ பரவுவதை தடுக்க தேசிய ஊரடங்குக்கு  அழைப்பு விடுத்ததால, அதிர்ந்து போன அமைச்சர் அவசர, அவசரமாக கறி விருந்தை ரத்து செய்து விட்டாராம்... ஆடு, கோழிகளுக்கு கொடுத்த ஆர்டர் அப்படியே இருக்கட்டும்.... கொரோனோ அடங்கியதும், கறிவிருந்தை அமர்க்களமாக நடத்தி கொள்ளலாம் என்று கட்சிக்காரர்களிடம் சொல்லி இருக்கிறாராம்... இதனால அமர்க்களமான ஆட்டுக்கறி பிரியாணி, கோழிக்கறி விருந்தை கொரோனா வந்து கெடுத்திருச்சே என்று இலைக்கட்சிக்காரங்க அப்செட்டாம்... அதே நேரத்துல இப்பத்தானே காதுகுத்து விழா நடத்தினாரு... அதற்குள் மீண்டும் இன்னொரு கோயிலில் குடும்ப விழா, கறி விருந்து நடத்துவது ஏன் என்று அதிகாரிகள் தரப்பும் புலம்புகிறதாம்...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘அரசு அலுவலகத்துல மின் கட்டணமே கட்டலையாமே, அப்டியா...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘பெரும்பாலான அரசு அலுவலகங்களின் நிலை அப்டிதான். இதுக்கு தூங்காநகரம் மட்டும் விதிவிலக்கு இல்லை. திருமங்கலம், திருப்பரங்குன்றம், கள்ளிக்குடி ஆகிய 3 தாலுகாக்ககளை இணைத்து, கடந்த ஆண்டு ஒரு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் (ஆர்டிஓ) உருவாக்கப்பட்டதாம்.... இந்த அலுவலகத்திற்கு தனி கட்டிடம் இல்லாததால, திருமங்கலம் டிஎஸ்பி அலுவலகம் அருகே உள்ள தாசில்தார் குவார்ட்டர்சில் தற்காலிகமாக ஆர்டிஓ அலுவலகம் இயங்கி வந்தது. இந்த அலுவலகத்திற்கு உரிய நிதி ஒதுக்கீடு இல்லாததால, மின் கட்டணத்தை கடந்த 6 மாசமா கட்டாமல் அப்படியே விட்டுட்டாங்களாம்... மின்வாரியத்தினர் கட்டணம் கேட்டு வரும்போதெல்லாம், அதிகாரிகள் பேசி சமாளித்து அனுப்பி வந்திருக்காங்க... ஒரு கட்டத்தில் பொறுமையிழந்த மின்வாரியம், மின் இணைப்பை கடந்த வாரம் துண்டிச்சாங்க. . இதில் அதிர்ச்சியடைந்த வருவாய்த்துறையினர், 6 மாதமாக வந்த  பெரும் மின்கட்டணத்தை கட்டுவதை விட, பேசாம ஆபிசையே மாத்தினால் என்ன என்று யோசித்தார்களாம்... அதன்படி  திருமங்கலம் தாலுகா அலுவலகத்திற்கு, தற்போது ஆர்டிஓ அலுவலகத்தை மாற்றி விட்டனராம். பழைய அலுவகத்திற்கு தேடி வந்து ஏமாந்து திரும்பும் பொதுமக்களுக்கு இது தெரிந்தால், ‘அசிங்கமாகி விடும்’ என்பதால், ‘இடம் பத்தலை.... அதனால்தான் மாற்றி விட்டோம்’ என்று அதிகாரிகள் பேசி சமாளித்து வருகிறார்களாம்... இப்படியே போனால் மின்வாரியம் எப்டி திவால் ஆகாம போகும் என்று ஊழியர்கள் புலம்புகின்றனர்...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘புதுச்சேரி மேட்டர் பிளீஸ்...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘புதுச்சேரி பாகூர் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ தனமானவர், கட்சியில் அதிருப்தியுடன் செயல்பட்டு வந்தார். முதல்வர், அமைச்சர்கள் மீது பல்வேறு புகார்களை கூறி ஆளுநர் கிரண்பேடியை சந்தித்து அவர் மனுவும் கொடுத்தார். இதனைதொடர்ந்து அரசு கொறடா அனந்தராமன், அமைச்சர் நமச்சிவாயம், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள், சபாநாயகர் சிவக்கொழுந்துவை சந்தித்து ஆட்சிக்கு எதிராக செயல்பட்ட தனவேலு எம்எல்ஏவை தகுதி நீக்கம் செய்யகோரி மனு அளித்தனர். இந்த மனுவை பெற்று கொண்ட சபாநாயகர் சிவக்கொழுந்து, அரசு கொறடா அனந்தராமன் கொடுத்த மனு தொடர்பாக, பதில் அளிக்குமாறு தனவேலு எம்எல்ஏவுக்கு மூன்று முறை நோட்டீஸ் அனுப்பினார். ஆனால் தன் மீதான புகாருக்கு விளக்கம் அளிக்க தொடர்ச்சியாக கால அவகாசம் கேட்டு வந்த தனவேலு, சபாநாயகரை நேற்று சந்தித்தார். அப்போது அவரது காரில் தனவேலு எம்எல்ஏ என்று பின் கண்ணாடி முழுவதும் ஒட்டியிருந்தார். மேலும் கையுறை மற்றும் முக கவசத்துடன் சட்டமன்றத்துக்கு வந்தார். சபாநாயகரை சந்தித்துவிட்டு வெளியே வந்த எம்எல்ஏ, எனது பதவியை பறிப்பதாக சொன்ன அவர்களுக்கு பதிலடியாக தான் காரில் பின்னாடி முழுவதும் எம்எல்ஏ பெயரை ஒட்டி உள்ளேன் என்று கெத்தாக சொல்லிவிட்டு சென்றதை சக கதர் கட்சியினர் பார்த்து கொதித்தப்படி சென்றனர்...’’ என்றார் விக்கியானந்தா.


Tags : party ,volunteers ,Corona ,peter mama ,Yananda , peter mama
× RELATED நாட்டு மக்கள் மரணம் அடைந்த பிறகும் வரி...