×

கொரோனா பாதிப்பால் வியாபாரிகள் வருகையின்றி வாழைத்தார் விற்பனை பாதியாக குறைந்தது: அழுகி வீணாகும் அவலம்

மதுரை: கொரோனா பாதிப்பால் வாழைத்தார் விற்பனை பாதியாக குறைந்துள்ளது. மதுரையில் மாட்டுத்தாவணி பழ மார்க்கெட், சிம்மக்கல், தயிர் மார்க்கெட் மற்றும்  ஓபுளா படித்துறை உள்ளிட்ட பகுதிகளில் வாழைப்பழ மொத்த வியாபார கடைகள் உள்ளன. இங்கு தேனி, கம்பம், முசிறி, குளித்தலை, தூத்துக்குடி மற்றும் மேலூர் உள்ளிட்ட மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்து செவ்வாழை, பூவன், நாட்டுப்பழம், ரஸ்தாலி, பச்சைப்பழம் மற்றும் நேந்திரம் உள்ளிட்ட பல வகையான வாழைப்பழங்கள் மொத்தமாக வரும். சராசரியாக தினசரி 800 முதல் 900 லோடு வரை வரத்து இருக்கும். இவற்றின் மூலம் மட்டும் ரூ.2 கோடி வரை வர்த்தகம் நடக்கும். மதுரை, விருதுநகர், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த வியாபாரிகள் மதுரைக்கு வந்து வாழைத்தார் வாங்கி செல்வது வழக்கம். தற்போது கொரோனா பாதிப்பால் தென்மாவட்டங்களைச் சேர்ந்த வியாபாரிகள்  மதுரை வருவது பாதிக்கும் மேல் குறைந்துள்ளது.

பெரும்பாலான ஓட்டல், மெஸ் போன்றவை மூடப்பட்டதால் வாழை இலை வியாபாரமும் பாதித்துள்ளது. சராசரியாக ரூ.1,500 வரை விற்பனை பெரிய இலைக்கட்டு தற்போது ரூ.300க்கும் குறைவானவிலையில் விற்பனையாகிறது. மதுரை மாட்டுத்தாவணி மார்க்கெட் வியாபாரி ஹக்கீம் கூறுகையில், ‘‘விலை குறைந்தும் வாழைத்தார் வாங்க ஆள் இல்லை. கடந்த வாரம் வரை கிலோ ரூ.40க்குள் விற்பனையான செவ்வாழை, தற்போது ரூ.25க்கும் கீழ் போய்விட்டது. ரூ.450 வரை விற்பனையான ஒரு தார் நாட்டுப்பழம் தற்போது ரூ.250க்கு விற்பனையாகிறது. ரூ.300க்கு விற்ற பூவன் பழம் ரூ.100, ரூ.300க்கு விற்பனையான பச்சைப்பழம் ரூ.100க்கு விற்பனையாகிறது. மதுரையில் மட்டும் ரூ.2 கோடி வரை நடந்த விற்பனை தற்போது ரூ.1 கோடியாக குறைந்துள்ளது. இது மேலும் குறைய வாய்ப்புள்ளது. வாழைப்பழம் தேங்கி அழுகி வீணாகும் அவலம் ஏற்பட்டுள்ளது’’ என்றார்.

Tags : merchants ,Corona ,Coroners ,Halfed , Corona, merchants, bananas, sales
× RELATED 2 மாதமாக நீடிக்கும் ஊரடங்கால்...