×

கும்மிடிப்பூண்டி அருகே இந்திய ஆதார் கார்டுடன் வந்த 3 ஜப்பானியர்களால் பரபரப்பு: அதிகாரிகள் அதிர்ச்சி

சென்னை: கும்மிடிப்பூண்டி அருகே வருவாய் துறையினர் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, காரில் வந்த 3 ஜப்பானியர்கள் தங்களது பெயரில் இந்திய ஆதார் கார்டுகளை வைத்திருந்ததால் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் ஏழுகிணறு பகுதியில் போலீசார், சுகாதார துறையினர் மற்றும் வருவாய் துறையினர் இணைந்து வாகன சோதனை மற்றும் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நேற்று மாவட்ட வருவாய் அலுவலர் கந்தசாமி தலைமையில் டிஎஸ்பி ரமேஷ், கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் குமார், வட்டார மருத்துவ அலுவலர் கோவிந்தராஜ் ஆகியோர் அவ்வழியே வாகனங்களில் வந்தவர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் கொரோனா செய்து கொண்டு இருந்தனர். அப்போது அவ்வழியே வந்த கார் ஒன்றை மடக்கி சோதனை செய்தபோது, அதில் பெண் உள்ளிட்ட 3 ஜப்பானியர்கள் இருந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரித்தபோது, அவர்கள் ஷின்யா ஹராடா (43), நசாரு நகஜிமா (57) மற்றும் நஹுமி யமாஷிடா (40) என்ற பெண் என்பது தெரியவந்தது.

இவர்கள் தமிழக - ஆந்திர எல்லையை ஒட்டிய ஆரம்பாக்கம் அருகே வசித்து, புதுவாயல் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் மகேந்திரா சிட்டியில் பணியில் ஈடுபட்டு வருவது தெரியவந்தது. அவர்களிடம் சோதனை நடத்தியபோது, பெங்களூரு மற்றும் அரியானா, குர்கான் பகுதி முகவரியில் மூவரும் இந்திய ஆதார் அட்டைகள் வைத்திருந்தது தெரியவந்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார், உடனடியாக கியூ பிரிவு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், விரைந்து வந்த கியூ பிரிவு போலீசாரிடம், அவர்கள் மூவரையும் ஒப்படைத்தனர். கியூ பிரிவு போலீசார், ஜப்பானியர்கள் இந்திய ஆதார் பெற்றது எப்படி என தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : Japanese ,Kummidipoondi ,Indian ,Surprise ,Indian Aadhaar , Gummidipundi, Aadhar card, Japanese
× RELATED இன்னொரு முறை பாஜ ஜெயித்தால் தேர்தல்...