×

கர்நாடகாவில் மேலும் 5 பேருக்கு பாதிப்பு

பெங்களூரு: கர்நாடகாவில் ஏற்கனவே 16 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியபட்டது. இதில் கல்புர்கியை சேர்ந்த 76 வயது முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்ற 15 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இதில் ராஜீவ் காந்தி நெஞ்சக மருத்துவமனையில் 10 பேரும், மற்ற 5 பேர் ேவறு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில் ஒருவர் முழு குணமடைந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். ேமலும், 5 பேர் குணமாகி வருகிறார்கள். அவர்கள் ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார்கள் என்று தெரிகிறது. இந்நிலையில், சிக்கபள்ளாபுரா மாவட்டத்தை சேர்ந்த 25 வயது வாலிபருக்கு கொரோனா அறிகுறி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் மெக்கா சென்றிருந்த இந்த வாலிபர், கடந்த வாரம் நாடு திரும்பினார். 2 நாட்களுக்கு முன் காய்ச்சல் ஏற்பட்டதால் மருத்துவமனை சென்றார். அவருக்கு ரத்த பரிசோதனை செய்ததில் கொரோனா அறிகுறி இருந்ததால், தனி அறையில் தங்க வைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது தவிர, மேலும் 3 பேருக்கு பாதிப்பு உறுதியாகி இருப்பதாக மருத்துவ உயர் கல்வித்துறை அமைச்சர் சுதாகர் நேற்று உறுதி செய்தார்.  இதன் மூலம், இம்மாநிலத்தில் கொரோனாவில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது.

என்னை யாரும்  சந்திக்க வராதீங்க: எடியூரப்பா வேண்டுகோள்:
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் இன்று  சுய ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து மால்கள், கடைகள் உள்ளிட்ட  அனைத்தும் இயங்காது. அரசு அலுவலகங்களும் மூடப்படும் நிலையில் மக்கள்  அனைவரும் வீடுகளில் இருக்கவேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். முதல்வர் எடியூரப்பாவும் தன்னை தனிமை படுத்திக்கொள்ள முடிவு  செய்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் அலுவலகம் நேற்று வெளியிட்ட செய்தி  குறிப்பில், ‘பொதுமக்கள் என்னை சந்திக்க வர வேண்டாம். அமைச்சர் உள்ளிட்ட அரசு  அதிகாரிகளும்  சந்திக்க வர வேண்டாம்,’ என்று கூறப்பட்டுள்ளது. எடியூரப்பாவின் பாதுகாப்பு பணியில் குறைந்த அளவில் போலீசார்  ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.


Tags : Karnataka , Karnataka, corona virus
× RELATED 5 மாநிலங்களில் இருந்து கர்நாடகாவிற்கு விமானங்கள் வர தடை விதிப்பு