×

சிறைக்கைதி உட்பட 2 பேருக்கு கொரோனா?....அரசு மருத்துவமனையில் அனுமதி

வேலூர்: வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிறை கைதி உட்பட 2 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறதா? என்பது குறித்து மருத்துவத்துறையினர் பரிசோதித்து வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி கிளைச்சிறையில் உள்ள 39 வயது மதிக்கத்தக்க கைதி ஒருவருக்கு கடந்த 3 நாட்களாக கடுமையான காய்ச்சலுடன் இருமல், சளி அதிகமாக இருந்துள்ளது. சிகிச்சை அளித்தும் குணமாகவில்லையாம்.  எனவே, அவரை வேலூர் அரசு மருத்துவமனையில் உள்ள தனிவார்டில் அனுமதித்து கொரோனா பரிசோதனை செய்வதற்கு சிறை மருத்துவர்கள் நேற்று பரிந்துரை செய்தனர். அதன்படி, முகக்கவசம் அணிவிக்கப்பட்டு, போலீஸ் பாதுகாப்புடன் அவர் வேலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதேபோல் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் 45 வயது மதிக்கத்தக்க ஊழியர் ஒருவர் சில நாட்களுக்கு முன்பு மேற்கு வங்கத்துக்கு சுற்றுலா சென்று வந்துள்ளார். இந்நிலையில், கடந்த சில நாட்களாக அவருக்கு கடுமையான காய்ச்சல், இருமல், சளி இருந்துள்ளது. அந்த தனியார் மருத்துவமனையிலேயே தனி அறையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த சுகாதாரத்துறையினர் உத்தரவின்படி அவர் நேற்று வேலூர் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில் ‘மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கைதி, தனியார் மருத்துவமனை ஊழியர் ஆகிய 2 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்படவில்லை. ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. முடிவு வந்த பிறகே உறுதியாக தெரியவரும்’ என்றனர்.Tags : prisoner , Prisoner, Corona, Government Hospital
× RELATED மகாராஷ்டிராவில் மேலும் 2091 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி