×

பல கோடி முட்டைகள் தேக்கம் நாமக்கல் பண்ணைகளில் முட்டை ரூ.1க்கு விற்பனை: அழுகிவிடும் என்பதால் அதிரடி

நாமக்கல்: நாமக்கல் பண்ணைகளில் முட்டைகள் தேங்கி அழுகுவதை தடுக்க, பண்ணையாளர்கள் ரூ.1க்கு முட்டை விற்பனை செய்கின்றனர். கொரோனா வைரஸ் பீதி காரணமாக, நாடு முழுவதும் முட்டை, கறிக்கோழி சாப்பிட மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இதனால் நாமக்கல், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள முட்டைக்கோழி, கறிக்கோழி பண்ணைத்தொழில் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. கோழிபண்ணைகளில் முட்டை விலை குறைந்தும்  விற்பனை அதிகரிக்கவில்லை. கேரளா, கர்நாடகாவில்  கோழிகளை பறவை காய்ச்சல் தாக்கியுள்ளதால், அம்மாநிலத்திலும் முட்டை விற்பனை அதிகரிக்கவில்லை. இதனால் நாமக்கல்லில் உள்ள கோழிப்பண்ணைகளில் முட்டையின் தேக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தேக்கத்தை குறைக்க பண்ணைகளில் ஒரு முட்டை ரூ.1க்கு விற்பனை என புதிய பார்முலாவை பண்ணையாளர்கள் கையில் எடுத்துள்ளனர். கோடைக்காலம் என்பதால் பண்ணைகளில் ஒரு வாரத்துக்கு மேல் முட்டை இருப்பு இருந்தால், அழுக தொடங்கி விடும். இதனால் பெரும்பாலான பண்ணைகளில் ரூ.1க்கு முட்டை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதுகுறித்து பண்ணையாளர்கள் கூறுகையில், ‘என்இசிசி விலை ரூ.1.95 காசு. ஆனால் வியாபாரிகள் நேற்று முன்தினம் ரூ.1.50க்கு கேட்டனர். நேற்று ரூ.1க்கு கேட்க தொடங்கி விட்டனர். பண்ணைகளில் முட்டைகள் தேங்கினால் அழுகி, கெட்டுப்போய் விடும் என்பதால் ரூ.1க்கு முட்டையை விற்பனை செய்து வருகிறோம். தினமும்  3 கோடி முட்டை உற்பத்தி ஆகும் நிலையில், என்இசிசி ஒரு கோடி முட்டைக்கு மட்டும் மானியம் அறிவித்துள்து. இது பற்றி என்இசிசியிடம் இருந்து பண்ணையாளர்களுக்கு எந்த அறிவிப்பும் வரவில்லை. எனவே, முட்டைகள் தேக்கத்தை தடுக்க, வியாபாரிகள் கேட்கும் விலைக்கு முட்டையை விற்பனை செய்து வருகிறோம்,’ என்றனர். ஒரு கிலோ கறிக்கோழி உயிருடன் பல்லடத்தில் ரூ.10க்கு விற்பனை செய்யப்படுகிறது. கறிக்கோழி விற்பனை கடைகளில் ஒரு கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. 5 கிலோ ரூ.100க்கு தரப்படும் என நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு சிக்கன் கடைகளில் அறிவிப்பு செய்தும், மக்கள் வாங்க அச்சப்படுகிறார்கள்.



Tags : farms ,Namakkal Farms ,Egg Sale , Eggs, Namakkal, Farm, Sale
× RELATED தும்மனட்டி பண்ணையில் ஸ்ட்ராபெரி பழங்கள் சாகுபடி